சென்னை: மதுராந்தகம் தொகுதியில் தவெக வெற்றிக்கு சாதகமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மறைமுகமாக உதவி செய்து வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன. மதுராந்தகம் இடைத்தேர்தலில் சிவி சண்முகத்திற்கு எந்த பொறுப்பும் அளிக்கப்படாத சூழலில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வன்னியர்கள் வாக்குகளை திருப்ப சில பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தக் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் தவெக சார்பாக மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரு வேட்பாளர்களை மேடையேற்றி முதல்வர் விஜய்யும் முதல் நாள் பிரச்சாரத்தை முடித்துவிட்டார்.
இருப்பினும் 2 தொகுதிகளிலும் தவெகவுக்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான சவால் அளித்து வருகின்றன. குறிப்பாக அதிமுக இம்முறை இடைத்தேர்தலை தீவிரமாக எடுத்து கொண்டிருக்கிறது. தாராபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமாக நிலவரம் இருக்கிறது. ஆனால் மதுராந்தகத்தில் வன்னியர்கள் வாக்குகள் எந்த பக்கம் திரும்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வன்னியர்களின் வாக்குகளை கவர்வதற்காக பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாக தவெகவினர் வதந்தியை கிளப்பி இருக்கின்றனர். மறுபக்கம் பாமக நிர்வாகிகளை அதிமுகவினர் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு மதுராந்தகம் தொகுதியில் எந்தப் பணிகளும் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிமுக தோல்வி அடைந்தால் தான் நமக்கு சாதகம் என்ற மூடில் சிவி சண்முகம் இருப்பதாக தெரிகிறது. இதனால் மதுராந்தகம் தொகுதியில் இருக்கும் வன்னியர்கள் வாக்குகளை தவெக பக்கம் திருப்பும் பணிகளை சிவி சண்முகம் செய்து வருவதாக முனுமுனுக்கப்பட்டு வருகிறது. சிவி சண்முகம் ஆதரவாளர்கள் மரகதம் குமரவேலுடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் 4 வார்டுகளுக்கு எஸ்பி வேலுமணி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இதுவரை தாராபுரம் தொகுதி பக்கமே தலை வைத்து படுக்கவில்லை. இதனால் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் அடுத்தக்கட்ட மோதல் உருவாகும் என்று கருதப்படுகிறது.