எடப்பாடியை நாங்க ஏன் சந்திக்கணும்.. புஸ்ஸி ஆனந்தை சந்தித்ததன் பின்னணி என்ன? டென்ஷனான சிவி சண்முகம்!

  • சென்னை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பதில் அளித்துள்ளார். அமைச்சர் ஆனந்தை தொகுதி தொடர்பான பிரச்சனைக்காக சந்தித்ததாக கூறிய சிவி சண்முகம், எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    Advertisement

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்புக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் உரை முடிவடைந்த பின், அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை அதிமுக எம்எல்ஏ-க்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் செங்கோட்டையனும் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

    சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்திருக்கிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அடுத்தக் கட்டமாக எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்யும் திட்டத்தில் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Advertisement

    நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூட எஸ்பி வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இந்த நிலையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். அதில் சிவி சண்முகம் பேசுகையில், நாங்கள் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு எல்லாம் நடத்தவில்லை.. ஆகஸ்ட் 19ஆம் தேதி அவர் துறையின் மானியக் கோரிக்கை வருகிறது.

    அதுதொடர்பாக தொகுதி கோரிக்கைகளை கொடுத்துள்ளோம் என்றார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.. ஆனால் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துள்ளதால் சந்தேகம் எழுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவரை போய் நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும். அவருக்கும் எங்களுக்கும் என்ன இருக்கிறது.. தேவையற்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது.. புரிகிறதா.. விடுங்க என்று தெரிவித்தார்.

    English Summary

    CV Shanmugam Clarifies Meeting with Minister Bussy Anand, Questions Need to Meet Edappadi Palaniswami