இந்த 'வெற்றி' ஆட்சியிலாவது செய்வீர்களா?.. விஜய் அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த சி.வி.சண்முகம்!

  • சென்னை: "மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய, இந்த 'வெற்றி' ஆட்சியில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்" என அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் இன்று சட்டசபையில் பேசியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீதி, எரிசக்தி, இந்து அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், "தமிழ்நாடு இதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணமாக இருந்தது. அதனை தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி 60 ஆண்டுகள் ஆகப்போகிறது.

    Advertisement

    ஆனால் இன்று வரை மெட்ராஸ் ஐகோர்ட் என்றுதான் சொல்லப்படுகிறது. கேரளா ஐகோர்ட், ஆந்திரா ஐகோர்ட் என்றுதான் அழைக்கப்படுகிறது, 3 நீதிபதிகள் கொண்ட மணிப்பூர் ஐகோர்ட் கூட மணிப்பூர் ஐகோர்ட் என்றுதான் அழைக்கப்படுகிறது.

    ஆனால் இன்றுவரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயர் மாற்றப்படவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நான் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது பாரத பிரதமரிடம் இதனை கொண்டு சென்று சட்டத் திருத்தம் மூலம் சென்னை ஐகோர்ட் என சட்ட முன்வடிவு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்கள். கல்கத்தா நீதிமன்றம் மீண்டும் பெயர்மாற்றம் செய்யவேண்டும் எனக் கூறியதால் அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.

    Advertisement

    அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றி அமைக்க வேண்டும் என திருத்தி மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

    எனது கோரிக்கை, சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசை வலியுறுத்தி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய, இந்த 'வெற்றி' ஆட்சியிலாவது தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

    முன்னதாக, நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம், காமராஜர் சாலையில் உள்ள லேடி வில்லிங்டன் உயர்கல்வி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை தற்போது முறையாகப் பராமரிக்கப்படாமல், பிறந்தநாள் அன்று மட்டும் பராமரிக்கப்படுகிறது. தினந்தோறும் அந்தச் சிலைக்கு மாலை அணிவித்து பராமரிக்க வேண்டும். அரசு செய்யவில்லை என்றால், எங்களிடமாவது அதனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

    Advertisement

    அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், "எங்கள் அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மறந்துவிடாது. 2022-ல், லேடி வில்லிங்டன் வளாகத்தில் 9 அடி உயரமுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை உள்ளது. ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் அன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய சி.வி. சண்முகம், "லேடி வில்லிங்டன் வளாகம் அல்ல, ஜெ. ஜெயலலிதா வளாகம் எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன. அங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு காரணங்களால் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்த அரசு மீண்டும் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தைத் திறக்க வேண்டும்" என்றார்.

    English Summary

    AIADMK MLA CV Shanmugam stated in the Assembly today that a resolution must be moved and passed by this government to rename the Madras High Court as the Tamil Nadu High Court.