சென்னை: நான் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. அதிமுக மீண்டும் புத்துயிர் பெற ஒரே வழி இதுதான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐடியா கொடுத்துள்ளார். சென்னை எம்ஆர்சி நகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்திருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இது ஒரு மோசமான தோல்வி. இதற்கு அதிமுக தலைமை என்ன காரணம் என்பதை நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதிமுக தொண்டர்களுக்கு தேவை ஒரு நம்பிக்கை. அதை கொடுத்தால் நாம் அதிமுகவை மீட்டெடுக்கலாம் என்ற ஒரு செய்தி இந்த தேர்தல் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாரும் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அதிமுகவில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. பொறுப்பில் இருப்பவர்கள் அதிமுகவை மீட்டெடுக்க தயாராக இருந்தால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்கிறோம். கடந்த முறை அதிமுகவுக்கு ஏற்பட்ட சோதனை காலங்களில் கூடவே இருந்தேன். தற்போது இந்த இயக்கத்தை புத்துயிர் கொடுத்து வலுப்படுத்த அனைவரையும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்களும் துணை நின்று ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இடைத்தேர்தலில் தவெக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. இதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இது வரவேற்கத்தக்க மாற்றம். எல்லோரையும் அரவணைத்து கொண்டு சென்றால் அதிமுக மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்து 3ஆவது இடத்தை பிடித்தது. கடந்த பொதுத் தேர்தலில் இரு தொகுதியிலும் வென்ற அதிமுக, தற்போது தோல்வி அடைந்தது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அவரே தலைமை பொறுப்பில் நீடிக்கவும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 5 தினங்களாக சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதில் அதிமுக தொடங்கி 55 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற போகிறது. வரும் 17ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அந்த விழா தொடர்பான பொதுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கட்சித் தலைமை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவன நாள் பொதுக் கூட்டங்களை புறக்கணிக்கலாம் என எஸ்.பி. வேலுமணி தரப்பு முடிவு எடுத்திருக்கிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடப் போகிறார்கள் என தெரிகிறது. அது போல் இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்த எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு எந்த பொறுப்பையும் வழங்காமல் ஓரம் கட்டியது குறித்து அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே விரைவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு பெரிய பிரச்சினை வெடிக்க போகும் என்பது உறுதி!