சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகும் அவர் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக சார்பில் ராஜ்யசபா எம்பியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் உலாவுகின்றன. இதன் பின்னணியில் செங்கோட்டையன் தான் இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
விழுப்புரம் மாவட்ட அரசியலில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் முக்கிய முகமாக இருந்து வருபவர் சி.வி.சண்முகம். எம்எல்ஏ, அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலிருந்தே அவரது நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக கருதப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவிலும் சி.வி.சண்முகம் இடம்பிடித்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, கட்சிக்குள் பல்வேறு அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கின. அந்த வரிசையில் சி.வி.சண்முகமும் தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைகள் காரணமாக சில மூத்த தலைவர்கள் பிளவாகி, பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படத் தொடங்கினர். ஆனால் சி.வி.சண்முகம் மட்டும் எடப்பாடி முகாமுக்கு செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணமாக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி கூறப்படுகிறது. தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பொறுப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பதில் சி.வி.சண்முகம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனை மீண்டும் பெற்றால்தான் முழுமையாக கட்சி பணிகளில் ஈடுபடுவேன் என அவர் உறுதியாக இருந்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், முதலில் ஒன்றிணைந்து செயல்படுங்கள், பின்னர் மாவட்ட செயலாளர் பதவி குறித்து பேசலாம் என்று பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் தான் விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை சி.வி.சண்முகம் தரப்பு திடீரென ஒப்படைத்தது. இந்நிலையில், தற்போது மயிலம் தொகுதியில் மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை சி.வி.சண்முகம் மேற்கொண்டு வருகிறார். அந்த பணிகளை முடித்த பிறகு சென்னை சென்று அதிமுக தலைமையுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் சி.வி.சண்முகம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமியும் அந்த விவகாரத்தில் எளிதில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சி.வி.சண்முகம் பெரிய முடிவை எடுக்கக்கூடும் என்ற பேச்சு அதிமுக வட்டாரத்திலேயே வலுத்து வருகிறது. அதிமுகவை விட்டு வெளியேறி தனக்கான புதிய அரசியல் பாதையை தேர்வு செய்யலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக தரப்புடன் சில இடைத்தரகர்கள் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. சி.வி.சண்முகம் தவெகவில் இணைந்தால், அவர் முன்பு வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி போன்ற பதவிகள் வழங்கப்படலாம் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன. ஆனால் இது தொடர்பாக எந்த தரப்பும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. எனவே இவை அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், சிவிசண்முகம் தவெகவுக்குச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது, அதிமுக முன்னாள் நிர்வாகியும், தற்போது தவெகவில் இணைந்து அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் தான் சிவிஎஸ் உடன் தொடர்பில் இருக்கிறார். அவரை நிச்சயம் தவெகவுக்கு அழைத்து வருவார் என்கின்றனர் அண்ணனின் விழுதுகள்.சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி
மாவட்ட செயலாளர் பதவி
எஸ்.பி.வேலுமணி
என்ன முடிவு?
தவெக
செங்கோட்டையன்