ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்?

  • சென்னை: தமிழக அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிகம் பேசப்படும் அதிமுக தலைவர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், தற்போது அரசியல் ரீதியாக மிக சோதனையான கால கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலின் மையப்புள்ளியாக மாறிய சி.வி. சண்முகம், விஜய் தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 25 எம்எல்ஏக்களின் அணியில் முக்கிய பங்காற்றியவர்.

    Advertisement

    எடப்பாடிக்கு எதிரான மோதல் காரணமாக, கட்சிக் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், சி.வி. சண்முகம் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

    சி.வி. சண்முகம்

    ஒரு காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் மிக சக்திவாய்ந்த தலைவராக கருதப்பட்ட சண்முகம், தற்போது கட்சியின் அமைப்பு அதிகாரத்தை முழுமையாக இழந்துள்ளதாக அவரது ஆப்போசிட் டீம் கூறுகின்றனர். அவருடன் இணைந்து செயல்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பின்னர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், சி.வி. சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    சமீபத்தில் தனது ஆதரவாளர்களான ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னையில் உள்ள இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்திய சி.வி. சண்முகம், "ஒவ்வொருவரும் தங்களது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.
    அதேநேரத்தில், "என்னை மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைக்க முயற்சிக்க வேண்டாம்" என்ற வகையிலான கருத்தையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது அவரது அரசியல் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை என்பதை காட்டுகிறது.

    அதிமுக

    சி.வி. சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பிறகு, முன்னதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த பசுபதி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
    இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகார மையம் முழுமையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சி அலுவலகம் தொடர்பான பிரச்சனையிலும் சண்முகம் தரப்பு பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, சண்முகம் ஆதரவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மாவட்ட அளவில் எழுந்துள்ளன.

    Advertisement

    தவெக

    தற்போதைக்கு அரசியல் வட்டாரங்களில் தற்போது அதிகம் பேசப்படும் கேள்வி இதுதான். சி.வி. சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறாரா? என்பது தான். அவரது சில ஆதரவாளர்கள் அப்படியான வாய்ப்பு இருப்பதாக கூறினாலும், இதுவரை சண்முகம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ சிக்னலையும் சொல்லவில்லை.

    விழுப்புரம்

    மறுபுறம், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, சி.வி. சண்முகம் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும், அவர் முன்பு பெற்றிருந்த அதிகாரம் மற்றும் செல்வாக்கை மீண்டும் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் அதிமுக தலைமை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மாவட்டச் செயலாளர்

    இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டால், சண்முகம் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளும் தனித்தனியாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் செஞ்சி ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ சக்கரபாணி உள்ளிட்டவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிவி சண்முகம் எதிர்காலம்

    தற்போதைய சூழலில் சி.வி. சண்முகத்திற்கு மூன்று வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒன்று, மீண்டும் அதிமுக தலைமையுடன் சமரசம் செய்து கட்சிக்குள் தொடர்வது. இரண்டாவது, புதிய அரசியல் முகவரியை தேர்வு செய்வது. மூன்றாவது, சட்டமன்ற உறுப்பினராக மட்டும் செயல்பட்டு, அவசரப்படுத்தாமல் காத்திருப்பது. இதில், எந்த பாதையை அவர் தேர்வு செய்கிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

    English Summary

    After losing key positions in AIADMK, CV Shanmugam faces crucial choices that could shape his political future.