சென்னை: வங்கக்கடலில் உருவான முரசு புயல், சென்னைக்கு வடக்கே ஆந்திராவை நோக்கி நெருங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை கொடுத்திருக்கிறது.
முரசு புயலால் தமிழகத்திற்கு ஆபத்து கிடையாது. இது வடக்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும், சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நாளையும், நாளை மறுநாளும் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உட்பட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரித்துள்ளது. இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர் ஏ.சிவஞானம் ஐஏஎஸ் விடுத்துள்ள உத்தரவில், "பேரிடர்களை கையாளுவதற்கான அரசால் வகுக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகங்கள் மிக கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த அதீத மழைப்பொழிவு எச்சரிக்கையால் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர சூழலையும் எதிர்கொள்ளும் வகையில், மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கிவிட்டு தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்டங்களில் மழையினால் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால், அது குறித்த விவரங்களை உடனடியாக மாநில பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்றும்.. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரியில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. நாளை நிலவரப்படி சென்னை மற்றும் திருவள்ளூரில் மிக பலத்த மழை பெய்யும் என்றும்.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரியில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. நவ.3ம் தேதி மிக பலத்த மழைக்கான எச்சரிக்கை இல்லை. ஆனால், நீலகிரியில் மட்டும் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பை அரசு மேற்கோளிட்டிருக்கிறது. இந்த உத்தரவு தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.