கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்?

  • சென்னை: நிதி மேலாண்மை என்பது வெறும் கணிதம் மட்டுமல்ல... அது உங்களின் உறுதித் தன்மை சார்ந்தது. கடன் மற்றும் முதலீடு என வரும்போது, எதற்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும். கடனை முடிக்கும் வரை முதலீடு செய்யக்கூடாதா எனப் பலருக்கும் குழப்பம் இருக்கும். ஒருவர் எது செய்தால் சரியாக இருக்கும் என வல்லுநர்கள் சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் முதல் கார்ப்பரேட் ஊழியர்கள் வரை அனைவருக்குள்ளும் ஓடும் ஆகப் பெரும் கேள்வி ஒன்று தான்- கைக்கு வரும் உபரிப் பணத்தை வைத்து கடனைச் சீக்கிரம் அடைப்பதா... அல்லது எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதா? என்பது தான் அது! உண்மையில் இரண்டில் எது பெஸ்ட் ஆப்ஷன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    கடன்

    கடன் என்பதே பாவம் என்று நினைத்து, கையில் கிடைக்கும் பணத்தை எல்லாம் கொடுத்து கடனை அசுர வேகத்தில் அடைப்பவர்களும் உண்டு.. கடன் பாட்டுக்கு ஓடட்டும், நாம் இன்வெஸ்ட் செய்வோம் என்று முடிவு எடுப்பவர்களும் உண்டு. ஆனால், இரண்டில் எது சரி என்று கேட்டால் அதற்கான விடை இந்த இரண்டுக்கும் நடுவில்தான் ஒளிந்திருக்கிறது.

    எது சரி!

    இந்தக் காலத்தில் பலரும் ஓரளவுக்கு நல்ல சம்பாதிக்கிறார்கள். ஆனால், அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தெளிவு பலருக்கும் இருப்பதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதேநேரம் கையில் இருக்கும் பணத்தைத் திறமையாக வேலை செய்ய வைக்கத் தெரிந்தவர் சீக்கிரமே நிதி சுதந்திரம் அடைகிறார்.. சரி விஷயத்திற்கு வருவோம்.. கடனா.. முதலீடா!

    Advertisement

    என்ன செய்யலாம்

    நீங்கள் வாங்கியுள்ள கடனின் வட்டி விகிதமும், உங்களுக்கு முதலீட்டின் மூலம் கிடைக்கப் போகும் உத்தேச லாபமும் தான் உங்களின் முதல் வழிகாட்டி.. அதாவது அதிக வட்டி போடும் கடன்கள் இருந்தால் அதை முடியுங்கள்.. உங்களிடம் 14% வட்டி வசூலிக்கும் ஒரு தனிநபர் கடனோ அல்லது கிரெடிட் கார்டு பாக்கியோ இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதே நேரத்தில் உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 12% லாபத்தைத் தருகிறது. இங்கே, கடனை உடனே அடைப்பதே உங்களுக்கு 14% லாபமாக இருக்கும். எனவே, கிரெடிட் கார்டு, நுகர்வோர் கடன் போன்ற அதிக வட்டிக் கடன்களை முதலில் அசுர வேகத்தில் அடியோடு முடியுங்கள்.

    Advertisement

    அடுத்துக் குறைந்த வட்டி கடன்கள்.. அதேநேரம் உங்களிடம் குறைந்த வட்டி, அதாவது 8% வட்டி கொண்ட வீட்டுக் கடன் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்படி வட்டி குறைவாக இருந்தால் நீங்கள் முதலீடு பக்கம் திரும்பலாம்.. அதே நேரத்தில் ஈக்விட்டி முதலீடுகள் நீண்ட காலத்தில் 12% வரை லாபம் தர வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், வீட்டுக் கடனை இஎம்ஐ மூலம் மெதுவாகக் கட்டிக்கொண்டே, உபரிப் பணத்தை முதலீட்டில் திருப்புவதே புத்திசாலித்தனம். பலர் செய்யும் ஆகப்பெரும் தவறு, தங்களின் ஒட்டுமொத்தக் கடன்களும் தீரும் வரை முதலீடே செய்யாமல் தள்ளிப்போடுவதுதான்.

    Advertisement

    ஒரு குட்டி உதாரணம்

    28 வயதான ஒரு இளைஞர், தனக்கு இருக்கும் வீட்டுக் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு முதலீடே செய்யாமல் இருக்கிறார் என வைப்போம். அவர் 38 வயதில் கடனை முடிக்கும்போது, முதலீட்டின் மிக பெரிய ஆயுதமான கூட்டு வட்டி (Compounding) பலனைப் பெரியளவில் இழந்திருப்பார். அதுவே, அவர் தனது 28 வயதில் மாதம் ₹15,000 வீதம் 12% கூட்டு வட்டி தரும் ஒரு எஸ்ஐபி முதலீட்டைத் தொடங்கியிருந்தால், அடுத்த 30 ஆண்டுகளில் அது உருவாக்கும் செல்வத்தின் மதிப்பு அசுர வேகத்தில் இருக்கும். முதலீட்டைத் தள்ளிப்போடுவது, பிற்காலத்தில் உங்களை அதிகப் பணத்தை முதலீடு செய்யக் கட்டாயப்படுத்தும்.

    Advertisement

    உபரிப் பணத்தை எப்படிப் பிரிப்பது?

    எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன், உங்களின் 6 மாதச் செலவிற்கான அவசரக்கால நிதியைச் சேர்த்து வையுங்கள். இது எதிர்பாராத மருத்துவச் செலவுகளின் போது உங்களை மீண்டும் கிரெடிட் கார்டு கடனுக்குள் தள்ளாமல் பாதுகாக்கும். அதிக வட்டி கடனை முடியுங்கள்.. அதிக வட்டி இருக்கும் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை முதலில் க்ளோஸ் செய்யுங்கள்.

    குறைந்த வட்டி உள்ள கடன் இருந்தால் உங்கள் கையில் இருக்கும் பணத்தைப் பிரியுங்கள் உதாரணத்திற்கு உங்களிடம் மாதம் ₹30,000 உபரிப் பணம் இருக்கிறது எனில், முழுப் பணத்தையும் கடனுக்கே கட்டாமல் ₹20,000ஐ கடனைக் கட்டவும், மீதியை முதலீடு செய்யவும். இதன் மூலம் கடனும் கடகடவென குறையும், உங்களின் இன்வெஸ்ட்மென்ட் பயணமும் தடையின்றி அக்மார்க் வேகத்தில் ஓடும்.

    இது பொதுவான செய்தி மட்டுமே.. இதை முதலீட்டு ஆலோசனையாக நிச்சயம் எடுத்துக் கொள்ளக்கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார வல்லுநரிடம் ஆலோசனை பெறவும்.

    English Summary

    Financial analysts share key insights on balancing high-interest loan repayments with compound interest mutual fund investments(முதலீடு கடன் இரண்டில் எது செய்யலாம்): Debt vs Investment latest news in tamil.