காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக

  • சென்னை: நீட், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் ஜூன்.8ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திமுக அதிரடியாக அறிவித்திருக்கிறது.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. இது திமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் எனவே இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் திமுக அறிவித்திருக்கிறது.

    Advertisement

    என்ன பிரச்சனை?

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை திமுகவுடன்தான் காங்கிரஸ் எதிர்கொண்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத விதமாக வந்தது. இதனையடுத்து, திமுக தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் ஓடி சென்று தவெகவுக்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ். தொடர்ந்து இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன.

    ஆனால், இந்த கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் திமுக தலைமையுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தங்கள் முடிவுகளை அறிவித்தனர். இதில் காங்கிரஸ் மட்டும்தான் விதிவிலக்கு. எனவே காங்கிரஸ் மீது திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருந்தது.

    ஆ.ராசாவின் வார்த்தைகள்

    இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ்-தவெக உறவு குறித்து திமுக எம்பி ஆ.ராசா கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். எனவே காங்கிரஸ்-திமுக இடையே மோதல் பெரியதாக வெடித்தது.

    Advertisement

    இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி விமர்சிக்க தொடங்கினர். இப்படி இருக்கையில்தான் தற்போது மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்ய லட்டு மாதிரி சூழல் அமைந்திருக்கிறது.

    பாஜக எதிர்ப்பு

    நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி சிறப்பாக களமாட வாய்ப்பு இருந்தும், திமுக இந்தியா கூட்டணியில் பங்கேற்காது என்று அறிவித்ததன் மூலம் தற்போது பாஜக எதிர்ப்பு பலவீனமடைந்திருக்கிறது.

    இது குறித்து திமுக தலைமை விடுத்துள்ள அறிவிப்பில், "டெல்லி "கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்" வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் "இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திமுகவின் அறிவிப்பு

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.

    Advertisement

    இந்தியா கூட்டணி

    "இந்தியா" கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.

    திமுக பங்கேற்காது

    தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா" கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.

    Advertisement

    இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    DMK: The Congress party issued an invitation for a meeting of the INDIA alliance parties on June 8 to discuss issues such as irregularities in the NEET and CBSE examinations, as well as the hike in petrol and diesel prices. However, the DMK has made a surprise announcement stating that it will not participate in this meeting.