டெல்லி சாலைகளில் முளைத்த வெள்ளை திரை.. BRICS மாநாட்டுக்காக மறைக்கப்படும் டெல்லி குடிசைகள்.. சர்ச்சை!

  • டெல்லி: 2026ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்த தலைநகர் டெல்லி தயாராகி வரும் நிலையில், நகரின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான சில முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. நமது ஒன்இந்தியா நடத்திய கள ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. அதாவது வெளிநாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் பயணிக்கும் முக்கிய சாலைகளின் ஓரங்களில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் உயரமான வெள்ளைத் திரைகள் மற்றும் துணித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இதற்கிடையே உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வரும் சாலைகள் திடீரென வெள்ளை நிற திரைகள் முளைத்துள்ளன. அதற்கு பின்னால் பல நூறு குடும்பங்கள் வசிக்கும் குடிசை பகுதிகள் உள்ளன. வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்களில் குடிசை பகுதிகள் படாமல் இருக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது போலவே தெரிகிறது.

    Advertisement

    வெள்ளை திரைகள்

    டெல்லியின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் திடீரென அமைக்கப்பட்டுள்ள இந்த வெள்ளை திரைகள், அப்பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை மறைப்பதற்காகவே அமைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்த தடுப்புகளால் மறைக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்று நாம் கள ஆய்வு மேற்கொண்டோம். பிரதான சாலைகளில் நகரின் தோற்றத்தை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தங்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்கள் அங்கு வாழும் மக்கள்! பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோசமான குடியிருப்பு சிக்கல், முறையான வடிகால் வசதி இல்லாதது, கழிவுநீர் தேங்குவது மற்றும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    வளர்ச்சியா.. வெறும் அலங்காரமா?

    வெளிநாட்டு பிரதிநிதிகள் டெல்லிக்கு வருவதற்கு முன்பாக, தங்களது குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் வகையில் உயரமான துணி தடுப்புகள் திடீரென அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தங்களது அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர்.

    இந்த நடவடிக்கை நகரில் உண்மையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, சர்வதேச தலைவர்களுக்கு டெல்லி குறித்து வேறு ஒரு தோற்றத்தை காட்டுவதற்கான தற்காலிக ஏற்பாடாகவே உள்ளது. குடிசை பகுதிகளை வெள்ளைத் திரைகளால் மறைப்பது, அங்கு வசிக்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மறைப்பதாகவே அமைகிறது. வீடுகள், கழிவுநீர் வடிகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல், முக்கிய சாலையை மட்டும் மேம்படுத்துவது உண்மையான நகர்ப்புற வளர்ச்சியை தராது!

    Advertisement

    பிரிக்ஸ்

    வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை தான் பிரிக்ஸ் அமைப்பின் முக்கியமான அம்சம். அப்படியிருக்கும்போது, சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் அதே பிரிக்ஸ் மாநாட்டிற்காக நகரின் வறுமையை மறைப்பது போன்ற நடவடிக்கைகள், அந்த கொள்கைகளுக்கு முரணாகவே இருக்கிறது.

    வளர்ச்சியின் பலனை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பெறுவதுதான் உண்மையான நகர்ப்புற வளர்ச்சியாக இருக்க முடியும். விளம்பரப் பலகைகள் மற்றும் திரைகளுக்கு பின்னால் குடிசைப் பகுதிகளை மறைப்பதற்கு பதிலாக, அங்கு வசிக்கும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

    Advertisement

    வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?

    பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டெல்லி தனது சர்வதேச தோற்றத்தை மேம்படுத்துவது ஓகே என்றாலும், நகரின் மற்றொரு முகத்தை மறைப்பது மட்டும் வளர்ச்சியாகிவிடாது. பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் மக்களின் நிலை மாறும்போதுதான் அந்த வளர்ச்சி உண்மையானதாக இருக்கும். அந்த வளர்ச்சி நடவடிக்கைகள் சரியான நேரத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டால் வெள்ளை திரைக்கு வேலையே இருக்காது.

    English Summary

    As Delhi prepares to host the 2026 BRICS Summit, high white screens and fabric barriers have appeared along key routes(முக்கியத்துவம் பெறும் டெல்லி பிரிக்ஸ் மாநாடு): Delhi BRICS Summit latest news in tamil.