சென்னையிலும் வெடித்த போராட்டம்.. களமிறங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்! எந்தெந்த இடங்கள்?

  • சென்னை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. இதனை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. அதன்படி சென்னையிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    Advertisement

    'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

    Advertisement

    இந்த தடியடி சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால் பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

    ஆனால் தமிழகத்தில் டெல்லி தடியடி சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படவில்லை என்று மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று 2 இடங்களில் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவ-மாணவிகள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் கோஷமிட்டனர்.

    அதேபோல் சென்னை எழும்பூரில் எஸ்எஃப்ஐ, டிஒய்எஃப்ஐ அமைப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் திடீர் போராட்டம் நடத்தினர். சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து அவர்களை போலீசார் தரதரவென இழுத்து குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    A lathi-charge was carried out against members of the 'Cockroach Janata Party' in Delhi who were protesting to demand the resignation of Union Minister Dharmendra Pradhan. Condemning this incident, protests have erupted in various parts of the country; consequently, protests have broken out in Chennai as well.