நிலைமை மோசமாகுது.. ஸ்டாலினுக்கே நேரடியாக போனை போட சோனியா திட்டம்? பின்னணி என்ன?

  • சென்னை: இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பக்கூடிய விவகாரமாக தொகுதி மறுவரையறை மசோதா 2026 உருவெடுத்துள்ளது. நீட் தேர்வு குறித்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் நிலவிவந்த அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடர்களில் இம்மசோதாவை மீண்டும் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது.

    Advertisement

    இருப்பினும், வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், புதிய மாற்றங்களுடன் இம்மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    50 சதவீத இடங்கள் உயர்வு

    முன்னதாக, மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தது. மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்பதே திமுகவின் முதன்மையான கவலையாக இருந்தது. இதற்காக Fair Delimitation போராட்டங்களை முன்னெடுத்தது.

    ஆனால், தற்போதைய புதிய திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் உள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 50 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால், நாட்டில் உள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-லிருந்து 816 ஆக உயரும். இதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆக கணிசமாக அதிகரிக்கும். மேலும், தென் மாநிலங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவ விகிதம் பாதிக்கப்படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

    Advertisement

    திமுகவின் புதிய நகர்வும் ராகுல் காந்தியின் கவலையும்

    இந்த பின்னணியில், தொகுதிகள் 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தமிழகத்தின் எதிர்கால அரசியல் வலிமை மற்றும் பிரதிநிதித்துவ உரிமையைக் கருத்தில் கொண்டு, இத்தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிப்பது குறித்து திமுக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. பழைய காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைந்து விட்டதாலும், இரண்டு தரப்பிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லாத சூழலிலும், பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையிலும், மாநில நலனுக்கு முன்னுரிமை அளித்து முடிவெடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    திமுகவின் இந்த வியூக மாற்றம் காங்கிரஸ் தலைமையையும் ராகுல் காந்தியையும் கடும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. வட மாநிலங்களின் அதிக மக்கள் தொகை காரணமாக, அங்கு தொகுதிகள் அதிகரிக்கும் போது அது முழுமையாக பாஜகவிற்கே சாதகமாக அமையும் என்றும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது மிகவும் கடினமாகிவிடும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இதனாலேயே தொகுதி மறுவரையறை நடவடிக்கையைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

    மத்திய அரசின் திருத்தப்பட்ட மசோதாவிற்கு திமுக ஆதரவளித்தால், அது காங்கிரஸின் அகில இந்திய அரசியலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ராகுல் காந்தி அஞ்சுவதாகத் தெரிகிறது. தெற்கில் பலமான கூட்டாளியாக விளங்கிய திமுகவை எதிர்த்தது தவறோ என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிரான போராட்டம் இதனால் பலவீனமடையும் என்பதும் ராகுல் காந்தியின் கவலையாக உள்ளது.

    Advertisement

    சோனியா காந்தியின் முயற்சி

    இந்தச் சூழலைச் சமாளிக்கவும், திமுகவின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கவும் சோனியா காந்தி நேரடியாகக் களமிறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச அவர் திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுலுடன் ஸ்டாலினுக்கு இருக்கும் நட்பு முறிந்துவிட்டதால் சோனியா களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும் போது, இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களும் கூட்டணி சமன்பாடுகளில் புதிய திருப்பங்களும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Delimitation Bill 2026: Sonia Gandhi Plans Strategic Call to MK Stalin