விஜய் நடத்தும் கூட்டத்தை புறக்கணிக்கும் அதிமுக.. 4 எம்.பிக்களும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்

  • சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக இன்று தமிழக முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் உள்ளனர்.

    Advertisement

    நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    Advertisement

    இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகலில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

    சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு சட்டப் பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நேற்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அதில் பங்கேற்று உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா?என்று கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "காவிரியில் எப்போது தண்ணீர் வரும் என கேட்கிறோம். அதற்கு பதில் சொல்ல மறுக்கிறீர்கள். மேகதாது விவகாரம் தொடர்பாக எப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவீர்கள் என்று கேட்கிறோம். அதற்கும் பதில் சொல்ல மறுக்கிறீர்கள். ஆனால், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டு விஷயத்தை திசை திருப்ப பார்க்கிறீர்கள்" என்று பதில் அளித்தார்.

    அமைச்சர்கள் இதே கேள்வியை தொடர்ந்து எழுப்பிய நிலையில், அதற்கு எங்கள் கட்சி தலைவர் முடிவு செய்வார் என்று பதில் அளித்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், திமுக இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற உள்ள எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை அதிமுகவும் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, இன்பதுரை ஆகியோர் தற்போது டெல்லியில் உள்ளனர். விஜய் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களவையில் தமிழ்நாட்டிற்கு 22 திமுக எம்.பிக்களும், 9 காங்கிரஸ் எம்.பிக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 எம்.பிக்களும், முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக கட்சிகளுக்குத் தலா ஒரு எம்.பிகளும் உள்ளனர்.

    Advertisement

    மாநிலங்களவையில் தமிழ்நாட்டில் இருந்து திமுகவிற்கு 8 எம்.பிக்களும், அதிமுகவிற்கு 4 எம்.பிக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பிக்களும், பாமக, மதிமுக, மநீம மற்றும் தேமுதிகவிற்குத் தலா ஒரு எம்.பிக்களும் உள்ளனர். தவெகவுக்கு இரு அவைகளிலும் 1 எம்.பி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்வர் விஜய் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 30 எம்.பிக்களும், அதிமுகவை சேர்ந்த 4 எம்.பிக்களும், மநீம கமல்ஹாசன், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.

    English Summary

    Reports indicate that the AIADMK will not participate in the all-party meeting of MPs convened today by Tamil Nadu Chief Minister Vijay regarding the constituency delimitation bill. AIADMK MPs, including Thambidurai and Inbadurai, are currently in Delhi.