20 IN.. 37 OUT.. முதல்வர் விஜய் இன்று நடத்தும் கூட்டத்தில் 20 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்க சான்ஸ்!

  • சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 57 எம்.பிக்கள் உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதல்வர் விஜய் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 37 எம்.பிக்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. 20 எம்.பிக்கள் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    Advertisement

    மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற உத்தேசித்துள்ளது. இந்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    Advertisement

    திமுக புறக்கணிப்பு

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என திமுக அறிவித்துள்ளது. தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அது இன்னும் கையில் கிடைக்கப் பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

    தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிராதாரப் பிரச்சனையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்காது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதிமுக புறக்கணிப்பு

    இதேபோல மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவும் முதல்வர் விஜய்யின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் என கூறப்படுகிறது. அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, இன்பதுரை ஆகியோர் தற்போது டெல்லியில் உள்ளனர். விஜய் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 4 எம்.பிக்களும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    தேமுதிக, மநீம

    மேலும், அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் எம்.பிக்களும் பங்கேற்கவில்லை. விஜய் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்ய சபா எம்.பியான கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    பாமக

    பாமக ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸும் விஜய் நடத்தும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் அழுத்தத்தை உருவாக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவே முதலமைச்சர் விஜய் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியிருப்பதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாமக, பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    20 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு?

    மக்களவையில் தமிழ்நாட்டிற்கு 22 திமுக எம்.பிக்களும், 9 காங்கிரஸ் எம்.பிக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 எம்.பிக்களும், முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக கட்சிகளுக்குத் தலா ஒரு எம்.பிகளும் உள்ளனர்.

    Advertisement

    மாநிலங்களவையில் தமிழ்நாட்டில் இருந்து திமுகவிற்கு 8 எம்.பிக்களும், அதிமுகவிற்கு 4 எம்.பிக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பிக்களும், பாமக, மதிமுக, மநீம மற்றும் தேமுதிகவிற்குத் தலா ஒரு எம்.பிக்களும் உள்ளனர். தவெகவுக்கு இரு அவைகளிலும் 1 எம்.பி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    37 எம்.பிக்கள் புறக்கணிப்பு

    தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 57 எம்.பிக்கள் (39 லோக்சபா + 18 ராஜ்யசபா) உள்ள நிலையில் முதல்வர் விஜய் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 30 எம்.பிக்களும், அதிமுகவை சேர்ந்த 4 எம்.பிக்களும், மநீம கமல்ஹாசன், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ், பாமகவின் அன்புமணி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.

    Advertisement

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பிக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலா 2 எம்.பிக்களும், முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக கட்சிகளின் தலா ஒரு எம்.பிகளும் என 20 பேர் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    English Summary

    With a total of 57 MPs from Tamil Nadu, it appears that 37 MPs—including those from the DMK and AIADMK—will not participate in the consultative meeting regarding the constituency delimitation bill being held by CM Vijay today; only 20 MPs are expected to attend.