தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: பாமக ஆதரிக்காது! ஒருமனதாக என போடக்கூடாது.. கணேஷ் எம்எல்ஏ

  • சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானத்தை பாமக ஆதரிக்காது, ஒரு மனதாக என்ற வாக்கியத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம் என பாமக எம்.எல்.ஏ கணேஷ் கூறினார். மேலும் இந்த தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி பெண்களின் உரிமைக்காகவும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கு எதிராகவும் பார்க்கிறது என்றார். ஏற்கனவே அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    Advertisement

    முதல்வர் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

    Advertisement

    பாமக எதிர்ப்பு

    இந்த தீர்மானத்திற்கு தவெக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆதரவு தெரிவித்தது. அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ், இந்த தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி பெண்களின் உரிமைக்காகவும், அரசியல் அதிகாரம் பெறுவதற்கு எதிராகவும் பாமக பார்ப்பதால் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று பேசினார்.

    மகளிர் உரிமைக்கு எதிராக

    இது தொடர்பாக கணேஷ் பேசியதாவது:- நம்முடைய சட்டமன்றத்தில் கூட முதல்வர் கூறியது போல 234 தொகுதியில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்றால், 77 எம்.எல்.ஏக்கள்தான் இந்த அவைக்கு கிடைப்பார்கள். ஆனால் கூடுதலாக தொகுதி வந்த பிறகு எடுத்து வைத்து பார்த்தால் 117 பெண் எம்.எல்.ஏக்கள் மகளிர் எம்.எல்.ஏக்கள் கிடைப்பார்கள்.

    Advertisement

    இன்றைக்கு இந்த அவையை எடுத்துக்கொண்டால் எங்கள் சட்டமன்ற கட்சி தலைவர் சவுமியா அன்புமணி உள்பட தவெக 4 பெண் அமைச்சர்கள் உள்பட 23 பெண் உறுப்பினர்கள்தான் இன்று உள்ளார்கள். இப்படி எல்லாம் இருக்கும் போது மகளிர் உரிமைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் எதிராகவும் நாமெல்லாம் இருக்கப் போகிறோமா.. ஒருபோதும் பாமக அந்த வேலையை செய்யாது.

    இந்த சட்டம் வருமா? வராதா?

    மேலும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இது குறித்த எந்த சட்ட முன்வடிவோ, அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை வெளிவரவில்லை. எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொடுக்கவில்லை. நேற்று சட்டமன்ற கூட்டத்தில் கூட, வேப்பனஹல்லி சட்டமன்ற உறுப்பினர் ஓசூர் விமான நிலையம் குறித்து கேட்ட போது, தொழில் துறை அமைச்சர் தெளிவாக சொன்னார். ஆதாரம் இருந்தால் கொடுங்க.. ஆதாரத்தை வைத்து பேசுவோம்.

    Advertisement

    செவி வழி செய்தியை வைத்து பேசினால் முறையாக இருக்காது என்று கூறினார். ஆனால் இன்றைக்கு செவி வழி செய்தியை வைத்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய தொகுதியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நிர்வகிப்பது என்பது வாய்ப்பே கிடையாது. எனவே இன்றைக்கு இந்த சட்டம் வருமா? வராதா? என்று இருக்கக் கூடிய சூழ்நிலையில் இந்த நேரத்தில் இந்த சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன இருக்கிறது என்று முதல்வர் விஜய் உடனடியாக இந்த தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என்று பாமக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    Advertisement

    ஒரு மனதாக என்ற வாக்கியத்தை நீக்க வேண்டும்

    ஏனென்றால் நடந்து முடிந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நம்முடைய கட்சி உள்பட அனைத்து கட்சியும் சேர்ந்துதான் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். இன்றைக்கு இந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று சொன்னால் அன்றைக்கு ஒரு நிலைப்பாடு, இன்றைக்கு ஒரு நிலைப்பாடு என்று அரசியல் இரட்டை நிலைப்பாடு என்று பொருள் ஆகிவிடும். மேலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிறீர்கள் என்று சொன்னால், ஒரு மனதாக என்ற வாக்கியத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறோம்" என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நீங்கள் உங்க கருத்தை மட்டும் சொல்லி முடியுங்கள்.. எந்த வாக்கியத்தை போட்டு முடிவெடுப்பது என்பது பற்றி நான் முடிவு செய்வேன்" என்றார். இதையடுத்து பேசிய பாமக எம்.எல்.ஏ, ஒருமனதாக என்ற வார்த்தை அந்த தீர்மானத்தில் இருக்க வேண்டாம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இந்த தீர்மானத்தை பாமக, பெண்களின் உரிமைக்கும், அவர்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் எதிராக பார்க்கிற காரணத்தால் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.. ஆதரிக்கவில்லை" என்றார்.

    English Summary

    PMK MLA Ganesh stated that the party would not support the resolution against constituency delimitation and demanded the removal of the phrase "unanimously." He further remarked that the PMK views this resolution as detrimental to women's rights and their access to political power. Parties including the AIADMK, BJP, and DMDK had already expressed their opposition to this resolution.