டிலிமிடேஷன்.. பாஜகவின் வலையில் வீழ்கிறதா திமுக.. விஜய் பிளானை காலி செய்ய போகிறதா மத்திய அரசு?

  • சென்னை: டிலிமிடேஷன் விவகாரத்தில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது? பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்லுமா? அப்படி நடந்தால் தவெகவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? காங்கிரஸ் இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ளும்? இந்தக் கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    அரசியல் களம் சேனலுக்கு அளித்த பேட்டியில் தராசு ஷ்யாம், "நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகளுடன் பேசாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல் முக்கியமானது.

    Advertisement

    டிலிமிடேஷன் - கிரண் ரிஜிஜு

    அதேநேரத்தில், பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கிரண் ரிஜிஜு கூறியிருக்கிறார். இதிலிருந்து டிலிமிடேஷன் நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுக்கிறது என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

    டிலிமிடேஷன் மூலம் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், எம்.எல்.ஏ. தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

    தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டியிருப்பதால், 2027-ல் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், 2028-ல் நடைபெற வேண்டிய சட்டமன்றத் தேர்தல் ஆகியவை எப்போது நடைபெறும் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் கீழ் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்தும் முயற்சியும் இருக்கிறது.

    Advertisement

    திமுக முடிவு என்ன

    இந்த சூழலில் திமுக எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமானது. திமுக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தாலும் அது மறைமுக ஆதரவாகவே அமையும்.. அங்கேயே இருந்து வாக்களித்தாலும் நேரடி ஆதரவாக இருக்கும். இதனால் பாஜகவுக்கு ஆதரவளிக்கும் கட்சி திமுக என்ற அரசியல் முத்திரை கண்டிப்பாக விழும். இதுவரை பாஜக எதிர்ப்பை முன்னெடுத்து வந்த திமுகவுக்கு, இது அரசியல் சவாலாகவே இருக்கும்.

    உள்ளாட்சி தேர்தலை வேகமாக நடத்தி, மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் தனது கட்சியினர் வெற்றி பெற வேண்டும் என்று தவெக எதிர்பார்க்கிறது. ஆனால் தொகுதி மறுவரையறையால் உள்ளாட்சி அமைப்புகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தலை உடனடியாக நடத்துவது சிக்கலாகும். இதனால் தவெகவின் அரசியல் திட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.

    Advertisement
    கார்த்திகா, அவரது கணவர் கைது! தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! ரிலீஸ் செய்யாவிட்டால்.. சீமான் ஆவேசம்

    பாஜக - திமுக - காங்கிரஸ்

    மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது தமிழக அரசியலில் புதிதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் அரசியல் சூழலுக்கு ஏற்ப மத்திய அரசுடனான உறவு மாறியிருக்கிறது.

    1998-ல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. பிறகு திமுகவும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றது. 2004-ல் திமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. எனவே, டிலிமிடேஷன் விவகாரத்தில் திமுக பாஜகவின் திட்டத்துக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு கொடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு கூடுதல் எம்.பி. தொகுதிகள் கிடைத்தால் மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்ற காரணத்தையும் திமுக முன்வைக்க முடியும்.

    Advertisement

    இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடும் முக்கியமானது. இவ்வளவு பெரிய அரசியல் மாற்றங்கள் நடைபெறும் சூழலில் அவர் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது குறித்தும் கேள்விகள் எழுகின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில், ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெறுகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளிடையே ஏற்படும் குழப்பத்தை பாஜக தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்ளும்.

    லேடீஸ்கிட்ட இப்படிதான் பேசுவியா? தனியார் பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்! லெப்ட் ரைட் வாங்கிய தவெக எம்எல்ஏ

    தவெகவுக்கு சிக்கல்?

    அதேநேரத்தில், தவெக அரசைக் கலைப்பது எளிதானதல்ல. அப்படியே கலைத்தாலும் விஜய்தான் மறுபடியும் ஜெயிப்பார்.. மேலும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின்படி, ஒரு மாநில அரசைக் கலைப்பதற்கு சட்டரீதியான கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, அதில் யாருடைய பெயர்கள் இடம்பெறுகின்றன, யார் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தும்.

    Advertisement

    ஏற்கனவே 3 தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் யாருடைய பெயராவது சேர்க்கப்பட்டால், தவெக அதற்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்... கரூர் கூட்டத்தை முறையாக நிர்வகிக்காதது, எச்சரிக்கைகளை புறக்கணித்தது போன்ற குற்றச்சாட்டுகளும் கட்சியின் பொறுப்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்தும்.

    ஆக, டிலிமிடேஷன் விவகாரம் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியிருக்கிறது... திமுகவின் நிலைப்பாடு, பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை, தவெக எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சட்டரீதியான கேள்விகள், காங்கிரஸின் முடிவு என 4 கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன" என்று தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Delimitation.. Will DMK Fall Into BJP’s Trap? Is the Centre Set to Upset Vijay’s Local Poll Plans?