சென்னை: சென்னையில் இன்று தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக காற்று மாசு அதிகரித்து வாகன ஓட்டிகள், சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். உலகிலேயே சென்னையில்தான் காற்று மாசு அதிகமாக காணப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதற்கு என்ன காரணம் என டெல்டா வெதர்மேன் விளக்கமளித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் ஒட்டுமொத்தமாக மக்கள் பட்டாசுகளை வெடித்து குவித்தனர்.
தலைநகர் சென்னையில் இரவு 7 மணி ஆனதும் வானம் வர்ணஜாலமாக மிளிர்ந்தது. ராக்கெட், வாண வேடிக்கைகள், ஷாட் வெடிகள் வானை வண்ணமயமாக்கின. பட்டாசுகளால் வானை வண்ணமயமாக்கினர். அதே நேரம் அதிகம் பேர் பட்டாசு வெடித்ததால் சென்னை நகரில் புகை மூட்டம் நிலவியது. பட்டாசு வெடித்ததால், நகர் முழுக்கவே புகைமூட்டமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாலை கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியது. இதற்கிடையே சென்னையில் தான் உச்சபட்சமாக காற்றின் தரம் மோசமாக இருந்ததாகவும் தகவல் வெளியானது. உலகிலேயே தலைநகர் சென்னையில் தான் காற்று மாசு அதிகமாக உள்ளதாக, உலக அளவில் காற்று மாசு குறித்து கண்காணிக்கும் ஏகியுஐ இணையதள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வளவு மோசமாக காற்றின் தரக்குறியீடு பதிவாக காரணம் என்ன என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விளக்கியுள்ளார். காற்று மாசு அதிகரித்துள்ளது குறித்து டெல்டா வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:- 'தலைநகர் சென்னையில் கடும் காற்று மாசு. காலை முதல் கிழக்கு காற்றுடன் மழை பெய்து வந்ததால் கட்டுக்குள் இருந்த காற்று மாசு தற்போது அதிகரித்துள்ளது. தரைக்காற்றின் வேகம் 10 கிமீ கீழ் குறைந்து, வடக்கு காற்று ஊடுருவல் துவங்கியதால் சென்னை & புறநகர் பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பின்பு காற்று மாசு அதிகரித்துள்ளது.. அடுத்த சில மணி நேரங்களில் படிப்படியாக நிலை சீரடையும்.. வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.. தூய்மை பணியாளர்கள் அடுத்த சில மணி நேரங்கள் பணியை தவிர்ப்பது நல்லது' என்று பதிவிட்டுள்ளார்.என்ன காரணம்?
டெல்டா வெதர்மேன் போஸ்ட்