சென்னை: தலைநகர் சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு மாதத்தில் இருமடங்காக உயர்ந்துள்ளது. ஆகஸ்டு மாதம் 605 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் 1,290 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் நடப்பு ஆண்டில் 18 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று அசுத்த நீர் தேங்கும் பகுதிகளை கண்காணித்து சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த இரு மாதங்களாகவே காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரித்து வருகிறது. திடீரென மழை பெய்வதும் பின்னர் வெயில் அடிப்பதும் என மாறி மாறி கிளைமேட் இருந்து வருவதாலும் இது போன்ற பருவ கால நோய்கள் பரவல் அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த ஒரு மாதமாக நோய் பரவல் அதிகரித்து வருகிறது. மக்களை அச்சுறுத்தக்கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பும் தமிழகம் முழுக்க அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் டெங்கு பாதிப்பானது கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் 605 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 1290 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு மாதத்தில் இரு மடங்காக பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் டெங்கு பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் டெங்கு பாதிப்பு வராமல் தடுக்க 4 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும், வீட்டை சுற்றிலும் கொசு உருவாகாமல் தடுக்க அசுத்த நீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழக அரசின் சார்பிலும் வீடு வீடாக சுகாதாரத்துறை ஊழியர்கள் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. * தீவிர காய்ச்சல் இருப்பது அல்லது 4 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருப்பது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் மக்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ, மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை பெற வேண்டும். அதே சமயம் கடுமையான வயிற்று வலி அல்லது தொடர்ச்சியாக வாந்தி எடுத்தல், ஈறுகளில் ரத்தம், மூக்கில் ரத்தம் வடிந்தாலோ, வாந்தி அல்லது மலம் வழியாக ரத்தம் வந்தாலோ ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் இரு மடங்காக உயர்வுஒரே நாளில் 72 பேருக்கு பாதிப்பு
டெங்கு பாதிப்பு அறிகுறிகள் என்ன?
* கண்கள் மற்றும் கண்களின் பின் பகுதியில் வலி இருப்பது
* கடுமையான தசை, எலும்பு மற்றும் மூட்டு வலி
* கடுமையான தலைவலி ஏற்படுதல்
* காய்ச்சல் வந்த 2 முதல் 5 நாட்களில் உடலில் ஆங்காங்கே சிவப்பு நிற தடிப்புகள் உருவாவுதல்.
* குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மை