சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் மொத்த பாதிப்பு 16,577 ஆக அதிகரித்திருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 87 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மருத்துவத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 16,577 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 9 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 244 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் 156 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அவர்களின் ரத்த மாதிரியை சோதித்ததில், 87 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணியில் 25,000க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டால், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டெங்கு பாதிப்பு தெரிந்துக்கொள்ள வேண்டியவை டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணம், டெங்கு வைரஸ் ஆகும். இது நேரடியாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஏடிஸ் இன பெண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் வைரஸ் பரவும். ஏற்கெனவே டெங்கு பாதித்த நபரை கடித்த கொசு, நம்மை கடித்தால்தான் டெங்கு பரவும். இதில் விசித்திரம் என்னவெனில், டெங்கு பாதித்த நபரை கடித்த கொசு யாரையும் கடிக்காமல், முட்டையிட்டு செத்துபோய்விடுகிறது என்றாலும்.. முட்டையிலிருந்து பிறக்கும் குட்டி கொசுக்களின் உடலில் டெங்கு வைரஸ் இருக்கும். இந்த முட்டைகள் நன்னீரில்தான் இருக்கும். ஒருவேளை தண்ணீரே இல்லாமல் இருந்தாலும்.. ஓராண்டு கழித்து மழை வருகிறது எனில்.. அப்போது இந்த முட்டை மீண்டும் உயிர் பெற்று.. அதிலிருந்து குட்டி கொசு வெளியே வரும். இப்படித்தான் டெங்கு பரவுகிறது. எனவே பகலில் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். டெங்கு பாதித்த 4கில் 3 பேருக்கு அறிகுறியே தெரியாது. லேசான காய்ச்சல், தலைவலி மட்டுமே இருக்கும். இருந்தாலும் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.