காத்மாண்டு: நேபாளத்திற்கு மானசரோவர் யாத்திரை சென்ற ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி உள்பட 150 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: திருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரைக்கு 2 குழுக்களாக சென்னையில் இருந்து ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் காத்மாண்டு வந்தோம்.
20ஆம் தேதி கெருங் (Kerung/ Gyirong) பார்டரை கிராஸ் செய்து எங்கெல்லாம் பயணத்திற்கு செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று, எங்கு தங்க வேண்டுமோ அங்கு தங்கி கைலாய யாத்திரையை மிக சிறந்த முறையில் மேற்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் 2 நாள் பரிக்கிரமாவை நிறைவு செய்துவிட்டு வரும் போதுதான் இந்த நேபாள துயரம் நடந்துள்ளது. அது கேள்விப்பட்டது முதல் மிகுந்த மனவேதனை, மன உளைச்சலுக்குள்ளானேன். பல்லாயிரக்கணக்கானே நேபாள மக்களும் பல நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களும் வெளிநாட்டினரும், தமிழகத்தை சேர்ந்தவர்களும் இந்த வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பலரது நிலைமை என்னவென இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எங்களுடன் 148 தமிழர்கள், 2 வெளிநாட்டவர்கள் என 150 பேர் பயணம் செய்துள்ளோம். நாங்கள் அனைவருமே மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம். சிவபெருமானின் பேரருள் பெருங்கருணையினால் நாங்கள் தற்போது சாகாவில் இருக்கிறோம். இங்கிருந்து வெளியேற என்ன வழி என்பது குறித்த நேபாள சீன இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எந்த வழியாக செல்ல அனுமதி கொடுக்கிறார்களோ அந்த வழியாக தாய்நாடு செல்லும் முயற்சிகளை மிக மும்முரமாக மேற்கொண்டிருக்கிறோம். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை சிவபெருமானின் அருள் காப்பாற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையையும் வைக்கிறோம். இந்த துயரச் சம்பவத்திற்கு ஆளானவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். பலரது நிலைமை என்ன என தெரியவில்லை. இதனால் அவர்களது நிலையை அறிய எல்லாரும் முயற்சித்து வருகிறார்கள். சிவபெருமான் துணையுடன் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி, ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் ஆன்மீக தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர் பல்வேறு கோயில் விழாக்ககளிலும் சொற்பொழிவாற்றி வருகிறார். இவர் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி ஆவார். இவர் 4 வயதிலேயே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு வென்றார். இதைத் தொடர்ந்து அவர் 6 வயது முதல் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். கடந்த ஜூலை மாதமும் இவர் கைலாய மலையில் பொன்னார் மேனி காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.