சென்னை: பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மறைவால் அவரது சொந்த கிராமத்தில் உள்ள உறவினர்களும் மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை தம்பி மகனின் பிறந்த நாளுக்கு தேவா வீடியோவில் வாழ்த்து தெரிவித்தாராம்.
வருடத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து குலதெய்வமான மகாபலி அம்மன் ஆலயத்தில் பங்காளிகளுடன் வழிபாடு செய்துவிட்டு உறவினர்களுடன் சகஜமாக பேசிவிட்டு செல்வாராம்.
கானா பாடல்களில் தனி முத்திரை பதித்த தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பழைய மாங்காடு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கும் கிராமத்திலுள்ள அவரது உறவினர்கள், வருடத்திற்கு ஒருமுறை சொந்த ஊரில் உள்ள அருள்மிகு மகாபலி அம்மன் ஆலயத்தில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய தேவா வருவாராம். அப்போது அனைத்து பங்காளிகள் மற்றும் உறவினர்களை அழைத்து ஒன்று கூடி வழிபாடு செய்துவிட்டு அனைவரிடமும் கலந்து பேசி மகிழ்ச்சியாக இருந்துவிட்டு செல்வது வழக்கம் என பழைய நினைவுகளை மனம் திறந்தனர் அப்பகுதி மக்கள். குறிப்பாக அவரது தம்பி மகனான சுதாகர் என்பவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று பிறந்தநாள் என்பதால் பிறந்தநாள் வாழ்த்துக்களை தேவா வீடியோ மூலமாக ஒளிப்பதிவு செய்து whatsapp மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய நிகழ்வுகளை நினைத்து பார்த்து வருத்தம் தெரிவிக்கிறார்கள். ஊரில் உள்ள தனது சொந்த நிலத்தை ஒரு ரூபாய் கூட பணம் பெறாமல் உறவினர்களுக்கு பகிர்ந்து அளித்து அதில் அனைவரும் வீடுகட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல தனது சொந்த செலவில், ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தை அமைத்து தந்ததோடு கோவில் செலவுக்காக பணம் வாங்காமல் கச்சேரி செய்து கொடுத்துவிட்டு சென்றிருக்கிறாராம். ஊர் மக்களின் இல்லங்களில் சுப விசேஷங்கள் என்று அழைத்தால், ஒரு நிமிடம் கூட தயங்காமல் நிச்சயம் கலந்து கொள்வேன் என சொல்வதோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். அவர் அவ்வாறு கலந்து கொண்ட நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பத்தை காட்டி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். அவரது மறைவு தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக உறவினர்கள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர். அது போல் தேவாவின் தம்பி மனைவி கூறுகையில், அவர் கடுமையாக உழைத்து வசதி வாய்ப்பு என இருந்தாலும் எங்களை மறக்காமல் எங்களிடம் பாசத்தை காட்டுவார். ஏழ்மை நிலையில் உள்ளவர்களுடன் எதற்காக பழக வேண்டும் என நினைக்க மாட்டார். எங்கள் ஊரில் யார் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்வார். எங்கள் ஊருக்கு கோயிலையும் கட்டிக் கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.தேவா கடைசியாக சொன்ன வார்த்தை! கள்ளம் கபடம் இல்லாத சொக்க தங்கம்.. நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்
தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. கண் கலங்கி அழுத ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆறுதல்