முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!

  • சென்னை: தமிழக காவல் துறையின் 34 வது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10.45 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பதவியேற்க உள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, காவல் துறையின் உச்சபட்ச பதவியில் நடத்தப்பட்டுள்ள முதல் முக்கிய அதிரடி மாற்றம் இதுவாகும். தற்போது தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக மகேஷ்குமார் அகர்வால் இந்த உயர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகளே நீடித்து வந்தனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தால் சந்தீப் ராய் ரத்தோர் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

    தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, நிரந்தர டிஜிபியைத் தேர்ந்தெடுப்பதற்கான யுபிஎஸ்சி ஆலோசனை கூட்டம் மே 26 அன்று டெல்லியில் நடைபெற்றது. சீனியாரிட்டி அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் பரிந்துரைத்த 3 முக்கிய அதிகாரிகளின் பட்டியலில் இருந்து, 1994-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வாலைத் தமிழக அரசு இறுதி செய்துள்ளது.

    Advertisement

    உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மகேஷ்குமார் அகர்வால், சட்டப் படிப்பும், மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தமிழக காவல் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    சென்னை காவல் ஆணையராக கொரோனா முதல் அலையின் போது சிறப்பாகப் பணியாற்றினார். 'காவல் கரங்கள்' மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான 'Drive Against Drugs' திட்டங்களைத் தொடங்கினார். சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட அதிரடி வழக்கு மற்றும் முக்கியக் குற்ற வழக்குகளின் விசாரணையை மேற்பார்வையிட்டார்.

    Advertisement

    தமிழக காவல் துறை சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை அரசுக்குச் சமர்ப்பித்த குழுவில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டார். மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பிரிவிலும் பணியாற்றியுள்ள இவருக்கு, சிறந்த சேவைக்காகக் குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், சட்டம் - ஒழுங்கைப் பலப்படுத்துவது மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது ஆகியவை புதிய டிஜிபியின் முன் இருக்கும் முக்கிய சவால்களாகப் பார்க்கப்படுகிறது. இவரின் பொறுப்பேற்புக்கு பின் அடுத்த சில நாட்களில் சிங்கப்பெண் அதிரடி பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    DGP: Mahesh Kumar Agarwal Repatriated by Centre to Take Charge as New DGP in Tamilnadu today