திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளவாய்ப்பட்டினம் வாக்குச்சாவடிக்கு காலையிலேயே புல் போதையில் வந்த வாக்காளர் ஒருவர், வரிசையில் நிற்காமல் தன்னை முதலில் அனுப்ப வேண்டும் என்று சலம்பல் செய்ததால், போலீசார் அவரை பிற்பகல் வந்து வாக்களிக்குமாறு திருப்பி அனுப்பிவிட்டனர். மதுபோதையில் வந்து அலப்பறை செய்த நபரால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.
வாக்குச்சாவடிகளில் விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட தளவாய்ப்பட்டினம் வாக்குச்சாவடிக்கு காலையிலே புல் போதையில் வந்து சலம்பலில் ஈடுபட்ட நபரால் சிறிது பரபரப்பு ஏற்படட்து. புல் போதையில் தள்ளாடியபடி வந்த நபர் தன்னை முதலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அலப்பறை செய்தார். இதனை பார்த்த வாக்காளர்கள் அவரை முதலில் அனுப்பிவிடுங்கள் என்று கூறினர். போலீசாரும் அமைதியாக சென்று வாக்களித்துவிட்டு வரவேண்டும். தேவையில்லாமல் சலம்பல் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். ஆனாலும் தள்ளாடியபடி சென்ற அந்த நபர் தொடர்ந்து சலம்பலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மேலும், வாக்காளர்களுடன் வாக்குவதம் செய்து கொண்டு அலப்பறை செய்த நிலையில் போலீசார் அவரை வாக்களிக்க அனுமதி மறுத்தனர். போதை தெளிந்த பிறகு பிற்பகலில் வந்து வாக்களிக்குமாறு அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இடைத்தேர்தல் காரனமாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் வாக்குப்பதிவு நாளன்று மது குடித்துவிட்டு வந்து அலப்பறை செய்தது தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.