எடுபடாத செங்கோட்டையன் மேஜிக்.. தாராபுரத்தில் தள்ளாடும் தவெக! கடைசி நேரத்தில் இறங்கும் ஸ்வீட் பாக்ஸ்?

  • சென்னை: மதுராந்தகம் - தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். தவெக தரப்பில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா & கோ மதுராந்தகத்தையும், செங்கோட்டையன்& கோ தாராபுரத்தையும் கண்ட்ரோலில் எடுத்திருக்கின்றனர். மதுராந்தகத்தில் ஓரளவு வெற்றி வாய்ப்பு இருக்கும் நிலையில், தாராபுரத்தில் வேட்பாளரை விரட்டியடிக்கும் அளவுக்கு மோசமாகத் தான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை அடுத்து அதிமுகவில் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இரக்க தயாராகி வருகிறார் செங்கோட்டையன் என்கின்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் களம் பல வரலாறுகளை புரட்டிப் போட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவும் அதிமுகவும் தமிழகத்தை ஆண்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது.

    Advertisement

    தனிப் பெரும் கட்சியாக இருந்தாலும் தனிப் பெரும்பான்மை இல்லாததால் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய். இதற்கிடையே அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகம்

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி, சண்முகம் தலைமையில் ஒரு அணி கிளம்பி விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தது. சில நாட்களிலேயே சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தாராபுரம் சத்யபாமா.

    Advertisement

    சத்யபாமா

    தமிழக அளவில் விஜய் அலை இருந்தபோதும் தாராபுரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற சத்யபாமாவும் ஒரு காரணம். சமுதாய ஆதரவு, இரட்டை இலை பலம், ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு அலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி 'சில பல ஸ்வீட் பாக்ஸ்களை' கொடுத்து வெற்றி பெற்றவர் சத்தியபாமா. இந்த நிலையில் தாராபுரத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அவர் போட்டியிடுகிறார்.

    செங்கோட்டையன்

    அவரது வெற்றிக்கு உதவ செங்கோட்டையனை களத்தில் இறக்கி இருக்கிறார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய். ஏற்கனவே கொங்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செங்கோட்டையன், இந்த தேர்தலில் நிச்சயம் தொகுதியை வென்று தருவேன் என விஜயிடம் உறுதி சொல்லி இருக்கிறார். ஆனால் களத்தில் நடப்பதோ வேறாக இருக்கிறது.

    Advertisement

    அதிமுக

    விஜய் அலையையும் தாண்டி நாங்கள் வாக்களித்து உங்களை வெற்றி பெறச் செய்தால்.. நீங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா? இணைந்த கையோடு போட்டியிட வருவீர்களா? என எதிர்ப்பு தெரிவித்து சத்யபாமா செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போதாக்குறைக்கு அதிமுகவினரும் பிரச்சினை செய்து வரும் நிலையில் பிரச்சாரத்திற்கே செல்லாமல் முடங்கி விட்டார் சத்யபாமா என்கின்றனர்.

    விஜய் பிரச்சாரம்

    இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் விஜய் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய் வருவதற்குள் அதிருப்தியை குறைத்து மாஸ் காட்ட வேண்டும் என செங்கோட்டையன் ப்ளான் பண்ணி வருகிறாராம். கூட்டத்துக்கு ஆட்களை திரட்டினாலும், தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வைக்க வேண்டுமே? அதுதான் பெரும் தலைவலியாக இருக்கிறது.

    Advertisement

    ஜெயலலிதா

    ஏற்கனவே பல கோடிகளை இறக்கி வென்றும் ராஜினாமா செய்து விட்டதால், பணத்தை இறக்கலாமா? வேணாமா? என சத்யபாமாவும் யோசித்து வருகிறார். ஜெயலலிதா காலத்தில் ஒரு வேட்பாளரை அறிவித்து விட்டால் தங்கள் சொத்தை விற்றாவது அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது அதிமுக மாவட்ட செயலாளர்களின் பொறுப்பாக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

    ஸ்வீட் பாக்ஸ்?

    இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிலை நாட்ட வேண்டும் என்றால் சத்யபாமாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் எண்ணம். ஆனால் கள நிலவரம் வேறாக இருப்பதால் விஜய் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் ஓட்டுக்கு மூன்று ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்து வாக்குகளை அள்ளி விட வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம்.

    Advertisement

    தாராபுரம் இடைத்தேர்தல்

    திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு ஃபார்முலா என பல பார்முலாக்கள் இருந்தாலும் பலகாலமாகவே தனது தொகுதியில் செங்கோட்டையன் ஒரு பார்முலாவை வைத்திருக்கிறார். அந்த பார்முலாவையும் தற்போது தாராபுரம் தேர்தலில் பயன்படுத்த போகிறார் என்கின்றனர். மறுபுறம் அதிமுகவும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்து வரும் நிலையில், தாராபுரம் தேர்தல் களம் உச்சகட்ட கொதிநிலையில் இருக்கிறது என்கின்றனர் அப்பகுதி அரசியல் புள்ளிகள்.

    English Summary

    Sengottaiyan leads TVK’s Dharapuram bypoll campaign as candidate Sathyabama faces opposition and growing electoral challenges.