சென்னை: தர்மேந்திர பிரதானை நீக்கினால் மட்டுமே நீட் சரியாகிவிடுமா? காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மட்டும் நீக்கக் கோரும் குறுகிய நோக்கத்தைக் கொண்டுள்ளது. தெளிவான கொள்கை நோக்கம் இல்லாததால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அண்ணா ஹசாரே ஆகியோரின் போராட்டங்களைப் போல இதுவும் ஒரு சில அரசியல் கட்சிகளின் லாபத்திற்கே வழிவகுக்கும்" என்று அரசியல் திறனாய்வாளர் முனைவர் பொன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
south beat என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பொன்ராஜ், "டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசித் தண்ணீர் பீச்சியடித்ததும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் பயிற்சி மையங்களின் வணிகமயமாக்கல் காரணமாக இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 30 நாட்களாக ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் அறப்போராட்டம் நடத்தியபோது கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாணவர்கள் தங்கள் குரலை உயர்த்த நாடாளுமன்றத்தை நோக்கி வந்தபோது ஒடுக்குமுறையைக் கையாண்டது. மாணவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் தங்களின் எதிர்காலத்திற்காகவே குரலெழுப்ப வந்தார்கள். அவர்கள் மீது வன்முறையைத் திணித்தது போலீஸே.. மக்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தலைவர்கள் செவிசாய்க்காத போதே, அது பெரும் மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது. அதை வன்முறை என்றோ தீவிரவாதம் என்றோ முத்திரை குத்த முடியாது. தமிழ்நாட்டிலும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் திருக்குறள் அறிவு போன்ற கலைஞர்களும் மாணவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். ஆளும் அரசுகள் மாணவர்களின் மருத்துவக் கனவைப் பொசுக்குவதாகவே செயல்படுகின்றன. நீட் தேர்வு என்பது சாமானிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ஒரு அநியாயமான தேர்வாகும். இதன் மூலம் பயிற்சி மையங்களும் வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுமே கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள். எய்ம்ஸ் போன்ற மத்திய நிறுவனங்களுக்கு மட்டும் நீட் தேர்வை வைத்துக்கொண்டு, மாநில அரசுகள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மருத்துவச் சேர்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை வழங்க வேண்டும். நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதே சரியான தீர்வாகும். நாட்டில் மக்களாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படுகின்றன. நூறு சதவீத VVPAT சான்றிதழ்களை எண்ண நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் முன்வருவதில்லை. அதனால், இவிஎம் முறையை ஒழித்துவிட்டு, மறுபடியும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும். தர்மேந்திர பிரதானை நீக்கினால் மட்டுமே நீட் சரியாகிவிடுமா? காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மட்டும் நீக்கக் கோரும் குறுகிய நோக்கத்தைக் கொண்டுள்ளது. தெளிவான கொள்கை நோக்கம் இல்லாததால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அண்ணா ஹசாரே ஆகியோரின் போராட்டங்களைப் போல இதுவும் ஒரு சில அரசியல் கட்சிகளின் லாபத்திற்கே வழிவகுக்கும்.என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.காக்ரோஜ் ஜனதா பார்ட்டி
திருக்குறள் அறிவு
இவிஎம் முறை ஒழிக்க வேண்டும்