தனது மனைவியான கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்காக தலைமை செயலாளருக்கு புகார் கடிதம் எழுதிய ஐஏஎஸ் ?

  • சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டரான பத்மஜாவுக்கு தனது செல்போனில் இருந்து கள்ளக்குறிச்சி (தனி) எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் (வயது 36) ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்துள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை கோரி தலைமைச் செயலாளருக்கு ஆட்சியரின் கணவரும், விழுப்புரம் மாவட்ட கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் பத்மஜாவுக்குஅருள் விக்னேஷ் மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது . இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர், இதுகுறித்து விழுப்புரத்தில் கலெக்டராக பணிபுரியும் தனது கணவரான ஷேக் அப்துல்ரஹ்மானிடம் தெரிவித்தாராம். இதையடுத்து அவர், இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பியிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினாராம்

    Advertisement

    இதற்கிடையே இந்த தகவல் அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அருள்விக்னேஷ், கலெக்டர் பத்மஜா ஆகியோரை அமைச்சர் ஆனந்த் அழைத்து பேசினாராம். அப்போது எம்.எல்.ஏ.வை புஸ்ஸி ஆனந்த் கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கலெக்டர், தலைமைச் செயலாளருக்கு புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் வழக்கம் போல் பணியை செய்து வந்தனர்.

    இந்தநிலையில் எம்.எல்.ஏ., கலெக்டரான பத்மஜாவுக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் கடந்த 8-ந்தேதி முதல் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது.. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டரான பத்மஜா வெளிப்படையாக எந்த மறுப்பு அறிக்கையும் வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவினாலும், இந்த விவகாரத்தில் முதல் முதலாக குரல் எழுப்பியது திமுக எம்பி கனிமொழி கருணாநிதி தான். அதன்பின்னர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என எல்லாருமே குரல் எழுப்ப தொடங்கினார்கள்.

    கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் குரல் எழுப்பியது. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்ட பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்டதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால், முறையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் வெளியாகும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாவட்டத்தின் மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

    திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Advertisement

    இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், அதிகாரிகள் மீது தனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருப்பதாகவும், யாருக்கும் தவறான குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பங்கேற்று வருவதாகவும், சில நிகழ்ச்சிகளின்போது சென்னையில் இருந்ததால் மட்டுமே கலந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். ஆட்சியருக்கு அஞ்சி அரசு விழாக்களில் பங்கேற்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம், தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் தான்தான் என்பதால், தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். தான் தவறான குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என நிரூபிக்கப்பட்டால், தன் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பரபரப்பான தகவல் ஒன்று பரவியது. கள்ளக்குறிச்சி எம்எல்எ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு, கலெக்டர் பத்மஜாவின் கணவரும், விழுப்புரம் மாவட்ட கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் பரவின.

    அந்த கடிதத்தில், தனது மனைவியான கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு, எம்.எல்.ஏ. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்றும், அத்துமீறி வீட்டுக்கு வந்ததாகவும், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த புகார் கடிதம், முதல்வர் விஜய்யின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவி உள்ளன.

    இந்த புகார் குறித்து தலைமைச் செயலாளர் நேற்று கலெக்டர் பத்மஜாவிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் பரவினது. அப்போது தலைமைச் செயலாளர், என்ன நடந்தது என்பதை முழுமையாக கேட்டறிந்தார். அப்போது அவர் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டருக்கு தைரியம் தந்தாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தில் வெளிப்படையாக என்ன நடந்தது என்பதை அரசும், கள்ளக்குறிச்சி ஆட்சியரும் விளக்கம் அளித்தால் தான் உண்மைகள் முழுமையாக தெரியவரும் .

    English Summary

    Reports have emerged that the Collector of Kallakurichi district, Padmaja, allegedly received an obscene text message on her mobile phone from Arulvignesh (aged 36), the MLA for the Kallakurichi (Reserved) constituency. It is reported that the Collector’s husband—who is himself the Collector of Villupuram district, Sheikh Abdul Rahaman—has written to the Chief Secretary requesting action to be taken against the MLA.