சென்னை: இந்து மதப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இஸ்லாத்திற்கு மாறும்போது அவர்களுக்கு பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக தலைமையிலான அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை முறையாகக் கையாளத் தவறியதே இந்த வரலாற்றுப் பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்ற கடுமையான அரசியல் விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன.
சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலன் காப்போம் என்று முழங்கி அதிகாரத்திற்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, சட்ட அரங்கில் இது ஒரு மிகப்பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது. இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் ஆதிதிராவிடர் (SC) வகுப்பிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) இடஒதுக்கீடு வழங்க வழிவகுத்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் முன்னதாக ரத்து செய்திருந்தது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இறுதி வாதங்கள் நடைபெற்றபோது தவெக அரசு போதுமான சமூக, வரலாற்றுத் தரவுகளைத் திரட்டி நீதிமன்றத்தில் அழுத்தமாக முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த வழக்கில் கடைசி கட்ட வாதம் தவெக ஆட்சிக்கு வந்தபின்.. அதாவது ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிய சில விவகாரங்கள், அரசின் வாதங்களில் இருந்த இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன: ஒரு சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் முன் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பின்தங்கிய நிலையை முறையான தரவுகள் மூலம் நிரூபிக்க வேண்டும். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இந்த வாதத்தை உறுதியான புள்ளிவிவரங்களுடன் முன்வைக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றக் குறிப்புகள் உணர்த்துகின்றன. மதம் மாறுவதால் மட்டும் ஒருவர் தானாகப் பட்டியலிடப்பட்ட முஸ்லிம் சமூகத்தில் இணைந்துவிட முடியாது என்றும், அரசாணை ஒரு செயற்கைக் குழுவை உருவாக்குகிறது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு எதிரான வலுவான சமூகவியல் வாதங்களை அரசு முன்வைக்கவில்லை. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யப் போராடி வந்த சமூக அமைப்புகளுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மதம் மாறிய முதல் தலைமுறையினர் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதாரப் புறக்கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அரசின் பாதுகாப்பு வளையம் இதனால் உடைந்துபோயுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வலுவான வாதங்களை முன்வைத்து அரசியல் சாசனப் பாதுகாப்புப் பிரிவுகளின் கீழ் சட்டப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டிய அரசு, மேலோட்டமான வாதங்களால் வழக்கை இழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. "ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் நிர்வாகம் மற்றும் சட்ட விவகாரங்களில் காட்டிய மெத்தனமே உச்ச நீதிமன்றத்தில் அரசின் வாதங்கள் பலவீனமடையக் காரணம்" என்று எதிர்க்கட்சிகள் தவெக அரசு மீது விமர்சனங்களை அடுக்கத் தொடங்கியுள்ளன. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியைக் காக்க, அடுத்தகட்டமாக சீராய்வு மனு தாக்கல் செய்வார்களா அல்லது விரிவான சமூக ஆணையம் அமைத்து முறையான தரவுகளோடு புதிய சட்ட வரைவு கொண்டு வருவார்களா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.தேர்தல் வாக்குறுதியும்... உச்ச நீதிமன்ற விசாரணையும்!
உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பலவீனம்
இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?
அரசியல் ரீதியான சலசலப்பு