சென்னை: அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராகக் கையாண்ட அதே வியூகத்தை, இப்போது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கையாள சண்முகம் தரப்பு திட்டமிட்டு வருகிறதாம்.. இதை பற்றின பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
அதிமுக விவகாரம் பற்றி பேசுவதற்கு முன்பு, விஜயகாந்த் - ஜெயலலிதா மோதல் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியை பெற்றது. அதன் தலைவரான விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இருந்தாலும், தன்னுடைய ஆதரவால்தான் இந்த நிலையை விஜயகாந்த் அடைந்தார் என்றும், அப்படிப்பட்டவரே சட்டமன்றத்தில் தன்னையே எதிர்த்துப் பேசுவதா என்றும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கோபமடைந்தார். விஜயகாந்திடமிருந்து எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை எப்படியாவது பறிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த ஜெயலலிதா, அதற்குப் பயன்படுத்திய ஆயுதம்தான் 'தனி அணி' வியூகம். அதன்படி, தேமுதிகவை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களை விஜயகாந்திடமிருந்து ஜெயலலிதா பிரித்தெடுத்தார். அந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அடுத்தடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, தங்களது தொகுதி சிக்கல்கள் மற்றும் தேவைகள் குறித்துக் கோரிக்கை மனுக்களை அளிப்பது போல போட்டோக்களை வெளியிட்டனர். சட்டமன்றத்திலும் அவர்கள் விஜயகாந்திற்கு எதிராகவே குரல் கொடுத்து, ஒரு தனி அணியாக இயங்கத் தொடங்கினார்கள். ஒருகட்டத்தில் "எங்களை தைரியமிருந்தால் கட்சியிலிருந்து நீக்குங்கள்" என்று அவர்கள் விஜயகாந்திற்கு பகிரங்க சவாலே விட்டனர். ஆனால், அவர்களை கட்சியிலிருந்து நீக்கினால் அவர்கள் தங்களின் பதவிகளை இழக்க நேரிடும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அவர்களை விஜயகாந்தால் நீக்கவும் முடியவில்லை. கடைசியில் இந்த திட்டமிட்ட நகர்வுகளால் விஜயகாந்த் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்திருந்தது இந்த நகர்வு.. இதே அதிரடியைதான், இப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஷயத்திலும் செக் வைக்க செக் சண்முகம் தரப்பு முடிவு செய்துள்ளதாம். அதாவது அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, சட்டமன்றத்திலும் வெளியிலும் எடப்பாடிக்கு எதிராக ஒரு தனி அணியாகச் செயல்பட வைப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இந்த யோசனையை வெறும் திட்டமாக மட்டும் வைத்திருக்காமல், அதனை செயல்படுத்துவதற்காக விஜய்யிடம் சண்முகம் தரப்பு கொண்டு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக முடக்குவதற்கு இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்த விஜய்யும், இந்த தனி அணி யோசனைக்கு தனது முழு சம்மதத்தையும் தந்துவிட்டதாக சண்முகம் தரப்பில் தகவல்கள் கசிகின்றன. அதிமுகவின் அதிருப்தி கோஷ்டியினரை திரட்டி எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம், வரும் தேர்தலில் அதிமுகவின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைக்க முடியும் என தவெகவினர் கணக்கு போடுகின்றனர். ஜெயலலிதா அன்று விஜயகாந்திற்குத் தந்த அதேபோன்றதொரு நெருக்கடியை எடப்பாடிக்கு கொடுக்க சண்முகம் தரப்பும் மும்முரமான காய்களை நகர்த்தி வருகிறதாம்.. இதற்கான முதற்கட்டக் ரகசிய ஆலோசனைகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இதற்கான செயல்பாடுகளும் அரசியல் நகர்வுகளும் வெளிப்படையான பொதுமக்கள் பார்வைக்கு வரும் என்றும், தமிழக அரசியலில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சண்முகம் தரப்பு வட்டாரங்கள் அடித்து சொல்கின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!. - எழில்விஜயகாந்த் - ஜெயலலிதா
தனி அணி வியூகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டீம்
விஜய் பச்சைக்கொடி காட்டிவிட்டாரா