பெரியபாளையத்தையும் விஜய் கண்டுக்கலியா? இதென்ன Mindset? அரசுக்கு எதிராக திரும்பிய நயினார் நாகேந்திரன்


  • சென்னை: திருவள்ளூர் பெரியபாளையம் அமோனியா வாயு கசிவு விபத்து குறித்து தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.. சினிமா பிரபலங்களை தினசரி சந்தித்து சிரித்துப் பேசி மகிழ நேரமிருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு, சொந்த ஆட்சியில் உயிரிழந்த ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா என்றும் கேள்வி கணைகளைத் தொடுத்துள்ளது.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்து, தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது.

    Advertisement

    கடந்த ஜூன் 21ம் தேதி புனித பீட்டர் பால் கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனத்தில் எதிர்பாராதவிதமாக விஷவாயு கசிந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 74 பேர் வடமாநில தொழிலாளர்கள் ஆவர்..

    பெரியபாளையம் விபத்து

    இந்த கோர விபத்து நடந்து பல நாட்களாகியும், தமிழக முதல்வர் விஜய் இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    விஜய் அலட்சியம்

    அதில், கரூரில் நடந்த சம்பவத்தைக் கைகழுவி விட்டது போல, தற்போது பெரியபாளையத்தையும் முதல்வர் விஜய் புறக்கணிக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொழிற்சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்து தமிழகமே சோகக்கடலில் மூழ்கியிருக்கும் வேளையில், உயிரிழந்தோரின் குடும்பத்தாரை இதுவரை நேரில் சென்று சந்திக்காத முதல்வரின் செயல் உங்களின் ஆணவத்தையும் அலட்சியத்தையுமே காட்டுகிறது என்று நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

    சினிமா பிரபலங்களை தினசரி சந்தித்து சிரித்துப் பேசி மகிழ நேரமிருக்கும் உங்களுக்கு, சொந்த ஆட்சியில் உயிரிழந்த ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா என்று அவர் கேள்வி கணைகளைத் தொடுத்துள்ளார்.

    Advertisement

    நயினார் நாகேந்திரன்

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் இழப்பீட்டுத் தொகையை மட்டும் அறிவித்துவிட்டு, நேரில் சந்திக்காமல் ஓரம் கட்டுவது என்ன விதமான மனநிலை என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் காட்டமாக கேட்டிருக்கிறார்.

    ஒருவேளை பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் உங்களைச் சந்திக்க பனையூருக்கு வந்தால் மட்டும்தான் உங்களின் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு, கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் பாதுகாப்பு, பெருகிவரும் போதைப்பொருள் புழக்கம், தமிழக வெற்றிக் கழகத்தினரின் அராஜகங்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், அடுத்த "நீரோ" மன்னன் போல முதல்வர் பதவியில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் உங்களின் உண்மை முகம் தற்போது மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் துவங்கிவிட்டது என்று நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

    Advertisement

    ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ள கொடூரமே இதற்கு சாட்சி என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

    வாயுக்கசிவு ஆய்வு

    இதனிடையே, இந்த வாயுக்கசிவு விபத்து தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) அதிகாரிகள் விபத்து நடந்த ஆலையில் இன்று தீவிரமான நேரில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆலையின் ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் ஒரு பகுதியாக, ஆலையில் இருந்த உணவு மாதிரிகள் முழுமையாக சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் ஆலை நிர்வாகத்தின் மீது உரிய ஒழுங்குமுறை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அமோனியா வாயு கசிவு விபத்து

    மேலும், விபத்து நிகழ்ந்த சமயத்தில் அந்த ஆலை வளாகத்திற்குள் சுமார் 270 மெட்ரிக் டன் கடல் உணவுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

    அமோனியா வாயு கசிவு காரணமாக அந்த உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தரம் குறித்து உடனடியாகக் கூட்டு நடவடிக்கை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் அசுத்தமடைந்து மனிதர்கள் பயன்படுத்த முடியாத நச்சுத்தன்மை வாய்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்ட சுமார் 13 மெட்ரிக் டன் கடல் உணவுப் பொருட்கள், தற்போது ஆலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அந்தப் பகுதியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    English Summary

    Did Vijay Ignore Periyapalayam? “What Kind of Mindset Is This?” Nainar Nagendran’s Sharp Attack