டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்!

  • சென்னை: இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிரடி மாற்றத்தை செய்ய மத்திய அரசு தற்பொழுது முழு வீச்சில் தயாராகி வருகிறது. பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதைப் போலவே, விரைவில் டீசலுடனும் 'ஐசோபியூட்டனால்' (Isobutanol) என்ற புதிய அதிநவீன பயோ எரிபொருளை கட்டாயமாகக் கலந்து பயன்படுத்துவதற்கான புதிய உத்தரவை இந்த ஆண்டு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    இந்தியா விரைவில் டீசலுடன் ஐசோபியூட்டனால் (Isobutanol) கலக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் வி.உமாசங்கர் தெரிவித்தார். இந்த முடிவு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு பெட்ரோலில் எத்தனால் கலப்பதை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    காரணம் இந்தியாவில் டீசல் பயன்படுத்தும் அளவு என்பது பெட்ரோலை விட இரு மடங்கு அதிகமாகும். இத்தகைய சூழ்நிலையில் இதுவரையில் டீசல் எவ்விதமான கலப்பும் இல்லாமல் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐசோபியூட்டனால் என்ற புதிய எரிபொருள் கலப்பு அறிமுகம் செய்வது மூலம் இருமடங்கு அதிக எரிபொருள் சேமிப்பு கிடைக்கும்.

    ஏன் ஐசோபியூட்டனால்?

    தற்போது பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டீசலுடன் எத்தனால் கலப்பதில் பல சிரமங்கள் உள்ளன. எத்தனால் டீசலுடன் சரியாக கலக்காது, பிரிந்து போகும், எரியும் வெப்பநிலை குறைவாக இருப்பதால் பாதுகாப்பு அபாயம், இன்ஜினை அரித்து சேதப்படுத்தும் போன்ற பிரச்சனைகள் உள்ளன.

    Advertisement

    இந்த சிக்கல்களை தீர்க்கும் வகையில் ஐசோபியூட்டனால் எனும் நான்கு கார்பன் கொண்ட ஆல்கஹால் பயன்படுத்தப்பட உள்ளது. இது பயோமாஸ், விவசாயக் கழிவுகள் போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் உள்நாட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும்.

    பாரத் பெட்ரோலியத்தின் ஆராய்ச்சி

    பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்கனவே டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பது தொடர்பான ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக உமாசங்கர் கூறினார். ஐசோபியூட்டனால் டீசலுடன் நன்றாக கலக்கும், அதிக எரிசக்தி கொண்டது, பாதுகாப்பானது, இன்ஜினை அரிக்காது, தற்போதுள்ள இன்ஜின்களுடன் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டது என பல நன்மைகளை கொண்டுள்ளது.

    Advertisement

    இந்த டீசல் + ஐசோபியூட்டனால் கலவை இந்திய சாலைகளில் ஓடும் டீசல் வாகனங்களின் செயல்திறனை பாதிக்காமல் இருக்கும் வகையில் கலக்கவும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆராய்ச்சி முடிவில் மத்திய அரசு கட்டாய கலப்பு விதிகளை கொண்டு வரும் பட்சத்தில் பார்த் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 பெரிய நிறுவனங்களும் ஐசோபியூட்டனால் கலப்பதை துவங்கும்.

    மக்களுக்கு என்ன பலன்?

    இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களின் அளவு குறையும். இதனால் வெளிநாட்டு செலவு குறைந்து, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு வலுப்பெறும். டீசல் விலை ஏற்ற இறக்கம் குறைவதால், போக்குவரத்துச் செலவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இது காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஸ்திரப்படுத்த உதவும்.

    Advertisement

    சுற்றுச்சூழல் நன்மை

    ஐசோபியூட்டனால் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து தயாரிக்கப்படுவதால், பாரம்பரிய பெட்ரோலிய எரிபொருட்களை விட சுற்றுச்சூழலுக்கு உகந்தது. நெடுஞ்சாலை போக்குவரத்தை கார்பன் இல்லாத திசையில் நகர்த்தும் அரசின் முயற்சிக்கு இது பெரும் உதவியாக அமையும்.

    இந்தியா போன்ற பெரிய நாட்டில் டீசல் நுகர்வு அதிகம் என்பதால், இந்த ஒரு முடிவு மொத்த எரிசக்தி இறக்குமதியை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த மாற்றத்தை வரவேற்கும் வகையில், அரசு விரைவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் என்று தெரிகிறது.

    ஐசோபியூட்டனால் என்றால் என்ன?

    ஐசோபியூட்டனால் (Isobutanol) என்பது நான்கு கார்பன் அணுக்களைக் கொண்ட ஒரு உயர்தர ஆல்கஹால் (C₄H₁₀O) வேதிப்பொருள் ஆகும். நாம் பொதுவாகப் பெட்ரோலில் கலக்கும் எத்தனாலில் வெறும் இரண்டு கார்பன் அணுக்கள் மட்டுமே இருக்கும் வேளையில், இது அதைவிட வீரியம் மிக்க மற்றும் ஆற்றல் வாய்ந்த ஒரு எரிபொருளாகக் கருதப்படுகிறது.

    Advertisement

    ஐசோபியூட்டனால் எப்படி தயாரிக்கப்படுகிறது?

    ஐசோபியூட்டனாலை பயோமாஸ் எனப்படும் தாவரக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் (Agricultural waste) அல்லது சர்க்கரை ஆலைகளில் எத்தனால் மற்றும் கரும்பு உற்பத்தியோடு தொடர்புடைய எளிய செயல்முறைகளின் மூலமாக, முற்றிலும் புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆதாரங்களில் இருந்தே மிக மலிவாகத் தயாரித்துவிட முடியும்.

    பொதுவாகப் பெயிண்ட்டுகள் மற்றும் கோட்டிங்ஸ் போன்ற தொழில்துறை தயாரிப்புகளில் ஒரு கரைப்பானாக (Solvent) மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வேதிப்பொருள், தற்பொழுது போக்குவரத்துத் துறையை அதிர வைக்கப் போகும் ஒரு உன்னதமான மாற்று எரிபொருளாக (Biofuel) விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    English Summary

    India is set to mandate isobutanol blending with diesel as early as this year, a move expected to have a bigger impact on energy security than ethanol blending in petrol since diesel consumption is nearly double. The initiative, backed by promising research from Bharat Petroleum, aims to cut fossil fuel dependence, lower emissions, and stabilize fuel prices for common people.