சென்னை: தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த பிறகு அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறைந்துள்ளதாக ஒரு தகவல் பரப்பப்படுகிறது. இந்த நிலையில் பணமாக வாங்கினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் யுபிஐ மூலம் லஞ்சம் வாங்குவது அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜிபே, போன், பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ ஆப்கள் மூலம் லஞ்சம் பெற்று வரும் நிலையில், அதையே அவர்களுக்கு ஆப்பாக மாற்றி வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
"மக்கள் பணத்தை தொட மாட்டேன்.. தொடவும் விடமாட்டேன். தொட்டவர்களையும் விடமாட்டேன்" என கரூரில் விஜய் ஆர்ப்பரித்து பேசியது தமிழக முழுவதும் ட்ரெண்டானது. யாராவது லஞ்சம் கேட்டால்.. இது எங்க அண்ணன் ஆட்சி.. எங்க விஜய் ஆட்சி.. என சொல்லுங்கள் என பேசி இருந்தார் விஜய்.
முன்னதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே லஞ்சம் ஊழலை ஒழிப்பேன் என கூறி இருந்தார் விஜய். ஆட்சிக்கு வந்த பிறகு பத்திரப்பதிவு, சிஎம்டிஏ, வருவாய் துறை அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத நிலை இருப்பதாக பரப்பப்படுகிறது. அதிகாரிகள் லஞ்சம் கேட்டாலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கின்றனர் என்றும் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர். ஆனால் உண்மை அப்படி அல்ல. பணமாக வாங்காமல் யுபிஐ மூலம் டிஜிட்டல் பேமென்ட் பெற்று வருகின்றனர் அதிகாரிகள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தற்போது அதையே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக லஞ்ச ஒழிப்புத்துறை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முழுவதும் கடந்த சில வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பத்திரப்பதிவு, கனிமவளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளை கணக்கில் வராத ரொக்க பணம் கைப்பற்றப்படுவது வெகுவாக குறைந்திருக்கிறது. யுபிஐ மூலம் லஞ்சப் பரிவர்த்தனை நடைபெறுவது தான் அதற்கு காரணம் என்ன சொல்லப்படுகிறது. கடந்தமாதம் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் சுமார் 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து பத்திரப்பதிவுத்துறை முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது. மேலும் ஜூன் 18ஆம் தேதி 40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 38 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியதோடு ஜிபே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் 6 லட்சம் வரை லஞ்சம் பரிவர்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் 35 தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அதிகபட்சமாக கணக்கில் காட்டப்படாத 83 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ஜிபே, போன் பே மூலம் 68 லட்சம் ரூபாய் இலட்சமாக பெறப்பட்டதும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த நிலையில் அதையே அதிகாரிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை. அதிகாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையால் லஞ்சம் பெற்றால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணம் சில அதிகாரிகளிடம் இருக்கிறது. ஆனால் அப்படி கிடையாது. யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஒவ்வொரு பேமெண்டிலும், பணம் அனுப்பிய தேதி, தொகை, அனுப்பியவர் யார்?, பெற்றவர் யார்? எந்த வங்கி கணக்கு பணம் சென்றது? என அனைத்து தகவல்களும் டிஜிட்டல் தடயங்களாக பதிவு செய்யப்படும். மேலும் செல்போன், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தால் பணம் யாருக்கு எதற்காக சென்றது என்பதை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர். மேலும் சில அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தாமல் உறவினர்கள் ஓட்டுநர்கள் அல்லது நண்பர்களின் வங்கி கணக்குகளில் பணத்தைப் பெற்று இருப்பதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் பணப்பரிமாற்ற முழு ஹிஸ்டரியையும் ஆய்வு செய்தால் ஒரு காலத்தில் அவர்கள் நண்பர்களிடமிருந்து அதிகாரிகளுக்கு பணம் சென்றதையும் கண்டுபிடித்திருக்கிறோம். இதனால் இதுபோன்ற பரிவர்த்தனைகளின் மூலம் அதிகாரிகள் தப்பித்து விட முடியாது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அன்றாட மக்களின் வாழ்க்கையை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது அதையே ஊழலுக்காக அதிகாரிகள் பயன்படுத்த தொடங்கி இருப்பது கவலைக்குரியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதையே தற்போது டிஜிட்டல் தடயங்களாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு வலுவான ஆதாரமாக மாறி இருக்கிறது. இதனால் லஞ்சத்தை எந்த வகையில் பெற்றாலும் தப்பித்து விட முடியாது என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.லஞ்ச ஒழிப்புத்துறை
யுபிஐ லஞ்சம்
பணம் பறிமுதல்
டிஜிட்டல் பரிவர்த்தனை
டிஜிட்டல் தடயங்கள்
முழு ஹிஸ்டரி
தப்பித்து விட முடியாது