சதுரங்க வேட்டை..கிரிப்டோகரன்சியில் டபுள் லாபம்! 15000 பேரிடம் 30 கோடி அபேஸ்! சிக்கிய மோசடி புள்ளிகள்

  • திண்டுக்கல்: கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தால் இரண்டே மாதத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பான தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 15,000 பேர் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில் 7000 பேர் தற்போது புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 3 ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிரிப்டோ கரன்சி (Crypto Currency Trading) வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.

    Advertisement

    அவ்வாறு இதில் முதலீடு செய்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையச் சரகம் காசம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்த புகாரில், FQL Exchange மற்றும் VG Investment ஆகிய போலி செயலிகள் மூலம் ரூ. 50,000 முதலீடு செய்தால் இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளார். நத்தம், காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மற்றும் விவசாய பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ. 30 கோடிக்கும் மேல் இந்த கும்பல் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் குமரேசன் மேற்பார்வையில் ஆய்வாளர் குற்றப்பிரிவு காவல் முத்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார், இம்மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளானதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த 1) ரமேஷ், 2) அவரது மனைவி அனிதா, மற்றும் 3) விஜய் ஆகிய 3 பேரையும் போலீசார் உடனடியாகக் கைது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தீனதயாளன், பிரியதர்ஷினி, ரஞ்சித் மற்றும் அருண் உள்ளிட்ட பிற எதிரிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எந்தவொரு சட்டபூர்வ நிதி நிறுவனமும் குறுகிய காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியாது.

    Advertisement

    அதிக வட்டி மற்றும் குறுகிய கால இரட்டிப்பு வாக்குறுதிகளை அளிக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், Play Store அல்லது அதிகாரப்பூர்வ நிதி நிறுவன அங்கீகாரம் இல்லாத APK லிங்குகள் (APK Files) மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் போலி செயலிகளில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பொதுமக்கள் இதுபோன்ற நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ, மாவட்ட குற்றப்பிரிவு (DCB) அலுவலகத்தையோ அல்லது சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐயோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

    English Summary

    Three agents arrested as Dindigul police probe alleged Rs 30 crore crypto investment scam affecting thousands.