சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நெருக்கமானவரும், அக்கட்சியின் வர்த்தகர் அணி மாநில இணை செயலாளருமான ஜெயன் திடீரென திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது தென்மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ஜெயனை தங்கள் கட்சியில் சேருமாறு தமிழக வெற்றிக் கழக தரப்பில் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. அதிமுக தரப்பிலும் சில தலைகள் ஜெயனை தொடர்பு கொண்டு பேசியதாக சொல்கின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவிலும் திமுகவிலும் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அதிமுக தரப்பில் இருந்து பல முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து கழன்று எதிர் முகாம்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
திமுகவிலும் தேர்தல் முடிந்தவுடன் சில ஒன்றிய செயலாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அதற்குப் பிறகு கட்சி தாவுவது குறைந்திருந்தது. இந்த நிலையில் திமுகவின் மாநில அளவிலான பொறுப்பு வைத்த முக்கிய நிர்வாகி ஒருவர் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக மாநில வர்த்தகர் அணி இணை செயலாளரான ஜெயன் திடீரென திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திமுகவில் பயணித்து வந்தவர் ஜெயன் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் முக்கியமாக, தேனியில் அவருக்கு ஆதரவு வட்டம் அதிகம். தேனி நாடாளுமன்றத் தேர்தல், கம்பம், சட்டமன்ற தேர்தலில் அம்மாவட்டத்தில் பொறுப்பாளராக பணியாற்றினார். 7 ஆண்டு காலம் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவர், அதற்குப் பிறகு மத்திய அரசு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்திலும் பணியாற்றியிருக்கிறார். கட்சியில் சேர்வதற்காக அந்த பதவிகளை துறந்து விட்டு திமுகவில் இணைந்தவர், முன்னாள் அமைச்சர் ஐ,பெரியசாமியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர். திண்டுக்கலில் இருந்து மாநில பொறுப்பு வகித்த ஒரு சிலரில் ஜெயன் முக்கியமானவர். தற்போதைக்கு பதவியில் இருந்த ஒரே மாநில நிர்வாகியும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறும் அவர், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் கம்பம் தொகுதியோடு திண்டுக்கல் தொகுதியிலும் தேர்தல் பணியாற்றியவர். தேர்தலில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் ஐபிஎஸ் செந்தில்குமாருக்கு வேலை பார்த்து இருக்கிறார். பொருளாதார ரீதியாகவும் பங்களிப்பை ஆற்றியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திமுகவில் தனக்கான உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என ஜெயன் அதிருப்தியில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தீவிரமாக பணியாற்றியும் சிலர் பேச்சைக் கேட்டு மூத்த நிர்வாகிகள் தன்னை ஓரம் கட்டுவதை அறிந்த ஜெயன் தானாகவே விலகுவதாக முடிவு எடுத்து இருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் சமூக வலைதலைத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த அவர் தான் கட்சிப் பணியாற்றிய போது தனக்கு ஆதரவாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், துணை பொது செயலாளர் ஐ பெரியசாமி, மாவட்ட செயலாளர், தொண்டர்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார். ஜெயன் பதவி விலகியதாக அறிவித்த போது நேரடியாக அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து பேசியதோடு சில முக்கிய நிர்வாகிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் நான் 'யார்' பேச வேண்டும் என நினைத்தேனோ? அவரே பேசவில்லை.. எனவே கட்சியில் இருந்து விலகியது விலகியது தான் என திட்டமிட்டமாக சொல்லிவிட்டாராம். இதற்கிடையே தங்கள் முகாமுக்கு ஜெயனை இழுக்க அதிமுகவும், தவெகவும் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும் சமுதாய ரீதியிலும் ஜெயனுக்கு ஆதரவு வட்டம் அதிகம் என்பதால், மேயர் ஆஃபர் தருவதாக சொல்லி தமிழக வெற்றிக் கழக தரப்பு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிமுக தரப்பில் இருந்தும் முக்கிய தலைவர்கள் ஜெயனிடம் பேசியதாக சொல்கின்றனர். ஆனால் எந்த கட்சிக்கும் செல்வதில்லை என திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறார் ஜெயன் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.