சென்னை: மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் கணக்கு பார்ப்பது அயோக்கியத்தனம் என இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 5,000 கோடி ரூபாய்க்கு மேல் குடும்பச்சொத்தாக வைத்திருப்பதாகக் கூறிய லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் 34 இலட்ச ரூபாய் மதிப்பில் கார் வழங்குவதாக அறிவித்த வெட்கங்கெட்ட தவெக அரசு, மாணவர் பாரதிதாசனுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்குக் கணக்குப் பார்ப்பதும், தயங்குவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!
ஒரு தலித் மாணவனையே வஞ்சித்து, கண்ணீர் சிந்த விடுவதற்குத்தான் நீங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்டீங்களா திருமா அண்ணே? இதுவெல்லாம் தலித் விரோதப்போக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ஏப்ரல் மாதம் முதல் உதவித்தொகை கேட்டு வருகிறேன். ஆனால் இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலைக்கழகத்தில் இருந்தே வெளியேற்றும் நிலை உள்ளது என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிந்தார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதிதாசனின் செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடர்பாக, பரிந்துரைத்து அனுப்பும்படி தெரிவித்து அவர் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் கடிதம் 17-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் நகல் அந்த மாணவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும். இந்தத் தகவலும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் பாரதிதாசன் சமூகவலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் 2-ம் ஆண்டிற்கு ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவரின் காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது. கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை, சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாணவரின் இந்த காணொளியானது உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாணவர் பதிலளிக்கையில், இதுகுறித்து அந்த மாணவர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: சமூகநீதித் துறை வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். அவர்கள் அனுப்பிய பில்லுக்கு நான் பதில் அனுப்பவில்லை என கூறியிருக்கிறார்கள். நான் பதில் அனுப்பிவிட்டேன். பதில் அனுப்பவில்லை என சொல்வது தவறான தகவல். ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கான பில்லை மெயிலில் அனுப்பிவிட்டேன். அதற்கான ஆதாரம் இதோ (Sent Mail -களை காட்டுகிறார்)! அந்த பில்லுக்கான எல்லா தகவல்களையும் நான் அனுப்பிவிட்டேன். ஆனால் நான் பில் அனுப்பவில்லை என உங்கள் ஐடி விங்கை வைத்து எனது கனவை சிதைக்க பார்க்கிறீர்கள். நான் இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். என்னை மேலும் மேலும் வேதனைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.