காரைக்குடி: காரைக்குடியில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் தனக்கான டோக்கன் கிடைத்தும் தங்க மோதிரம் கிடைக்காததால் உமா மகேஸ்வரி என்ற பெண் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சம்பவம் குறித்து பொது சுகாதார இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்குநரகம் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: திருமதி உமா மகேஸ்வரி , ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டதில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.
பிரசவத்திற்காக தனது தாயாரின் இல்லத்திற்கு வந்த அவர், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 17.09.2026 அன்று அறுவைச் சிகிச்சை (Cesarean Section) மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். உமா மகேஸ்வரிக்கு அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டதுடன், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்திலும் (Potnatal care) போதுமான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது. 29.09.2026 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது (discharge), "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்" கீழ் திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி கழனிவாசல் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் பெயர் சுரேஷ் குமார். உமா மகேஸ்வரிக்கு இது இரண்டாவது பிரசவம். தாய் வீட்டில் தங்கி பிரசவம் பார்த்துக் கொண்டார். பிரசவத்திற்காக சூரக்குடியில் உள்ள காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கடந்த கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி 12.01 மணிக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில் ஆண் குழந்தையை சேர்த்து அதற்கான அடையாள அட்டையையும் கொடுத்து உள்ளனர். மோதிரம் வழங்கும் தேதி 1.10.2026 என அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அக்டோபர் 1-ஆம் தேதி அன்று மோதிரம் கேட்ட போது கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதாவது ஆதார் அட்டையில் உள்ள முகவரி, தமிழக முகவரி இல்லை, கர்நாடகா முகவரி இருப்பதால் அவருக்கு தங்க மோதிரம் கிடையாது என கூறி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அனுப்பிவிட்டனராம். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து திருமணமாகி பெண்கள் வேறு ஊர்கள், வேறு மாநிலங்கள், வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் பிரசவம் என வரும் போது தாய் வீட்டில் தங்கியிருந்து பார்க்கிறார்கள். அது போல்தான் உமா மகேஷ்வரியும் திருமணமாகி கணவன் வீட்டுக்குப் போன நிலையில் அவரது வீட்டு முகவரி எப்படி தாய் வீட்டினுடையதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியாவது மோதிரத்தை கொடுக்காமல் மோசடி செய்யப் பார்ப்பது நியாயமா? அடையாள அட்டை வழங்கிய பின்னர் தரமாட்டேன் என்றால் என்ன நியாயம் என கேள்வி எழுகிறது. மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய் ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய அரசு முடிவெடுத்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 4.11 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு, நடப்பாண்டில் பட்ஜெட்டில் 560 கோடி ரூபாயை தவெக அரசு ஒதுக்கியது.மருத்துவச் சிகிச்சை
மருத்துவமனையில் டிஸ்சார்ஜ்
பிரசவம்
குழந்தையின் அடையாள அட்டை
ஆதார் அட்டை
கண்டனங்கள்
மோதிரத்தை கொடுக்காதது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்