தீபாவளி! யார்னா இருக்கீங்களா! நேற்று ஒரே நாளில் சென்னையை காலி செய்துட்டு ஓடிய 1.70 லட்சம் மக்கள்!

  • சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 1.70 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்றும் நாளையும் கூட மக்கள் பூர்வீக ஊர்களுக்கு படையெடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Advertisement

    தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை வரும் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால் நேற்று முதலே சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    Advertisement

    தீபாவளிக்காக தமிழகம் முழுவதும் 15,901 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 5ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்பு பேருந்துகளும் (1,659 தனியார் ஒப்பந்த பேருந்துகளும்) என 3 நாட்களுக்கு சேர்த்து மொத்தமாக 15,659 பேருந்துகள் இயக்கப்படும்.

    அது போல் தீபாவளி பண்டிகை முடிந்ததும், வரும் 9ஆம் தேதி, 10 ஆம் தேதி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பேருந்துகள் (1,241 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 2 நாட்களும் சேர்த்து மொத்தமாக 11,197 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அது போல் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    Advertisement

    இந்த நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து 862 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 2,207 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலமும் சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இன்று மாலைக்கு மேல் அதிகம் பேர் சொந்த வாகனங்களில் புறப்படுவர். இதனால் இன்றும் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும்.

    Advertisement

    தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் 5 இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

    அதாவது கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் சிஎம்டிஏ கால நிலை பூங்கா (தற்காலிக பேருந்து நிலையம்), மறைமலை நகர் நகராட்சி திடல் (தற்காலிகம்), புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    English Summary

    Diwali festival:1.70 lakhs people travelled to their native from Chennai through government special buses.