சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 93848 08333 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கக்கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள் (அதில், ஆயிரத்து 659 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15 ஆயிரத்து 659 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், வருகிற 9 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4 ஆயிரத்து 382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பேருந்துகள் (அதில், ஆயிரத்து 241 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11 ஆயிரத்து 197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்த 10 ஆம்னி பேருந்துகளை இப்போதே பறிமுதல் செய்து வைத்திருக்கிறோம். அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் எச்சரித்து உள்ளோம் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைக் கண்டறிய கிளாம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் 12 சிறப்புப் பறக்கும் படைகள் (Squads) அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிகளை மீறும் பேருந்துகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சருடன் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், குறைந்தபட்ச கட்டணத்தை அறிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணியருக்காக, ஆம்னி பஸ்களின் கட்டணத்தை, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு 2,500, கோவைக்கு 2,400 திருச்சிக்கு 2,000 ரூபாய் என, குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 93848 08333 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நலன் கருதி 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் 'May I help you' தகவல் மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.