4+4 = 0 அறிவாலயம் கணக்கு.. அதிமுகவுக்கு திமுக அனுப்பும் SOS அவசர சிக்னல்.. திட்டின சீமானுடன் எப்படி?

  • சென்னை: தேர்தல் முடிவுகளை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் ஒட்டுமொத்த பூலோகமே இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போலத்தான் தற்போது திமுகவின் நிலை உள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுக, சீமான் அரசியல் குறித்தும் வெளிப்படையான சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    அரசியலில் 2+2=4 ஆகத்தான் வேண்டும் என்ற அவசியமில்லை. அது பூஜ்ஜியமாக கூட மாறலாம். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி இந்தத் தேர்தலில் 4 விழுக்காடாகக் குறைந்துள்ள சூழலில், அம்பாசமுத்திரத்தில் சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்தி திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஆதரிக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் அரசியல் ரீதியாகப் பலன் தராது.

    Advertisement

    திமுக அதிமுக சிக்னல்

    கடந்த 2 மாதங்களாகவே விஜய் முதலமைச்சராவதைத் தடுப்பதற்காக அதிமுக ஆட்சியை அமைக்க திமுக முயற்சி செய்தது என்ற குற்றச்சாட்டுகளைப் பல தலைவர்கள் முன்வைத்தனர். இந்த செய்தி அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

    விஜய்யை தடுப்பதற்காகவே இப்போதைய அடுத்த கட்டமாக சீமானை 2 கட்சிகளும் முன்னிறுத்துகிறார்கள். இதற்கு சீமான் ஒப்புக்கொண்டால் அவருடைய அரசியல் எதிர்காலம் கடுமையான கேள்விக்குறியாகும். மறைமுக ஆதரவோடு போட்டியிட்டு சீமான் தோற்றுப் போனால் அது மிகப்பெரிய அவமானமாக முடியும்.

    "SOS" என அவசர செய்தி

    தற்சமயம் திமுக கடுமையான அரசியல் நெருக்கடியில் தவிக்கிறது. நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியவர்கள் "SOS" என அவசர செய்தி அனுப்புவதைப் போல, திமுக கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவிற்கு அத்தகைய சமிக்ஞைகளை அனுப்பி வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் உட்கார்ந்து கொண்டு, ஆர்.எஸ். பாரதி, "அதிமுகவுடன் சேர்ந்தால் என்ன தவறு, நாங்கள் பங்காளிகள்" என்று பேசியதே திமுக எந்த அளவிற்குப் பலவீனமடைந்துள்ளது என்பதற்குச் சிறந்த உதாரணம். திமுகவிடம் இப்போதைக்கு முறையான கூட்டணி என்று எதுவுமே இல்லை.

    Advertisement

    முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சமாதியை கடப்பாரை கொண்டு இடிப்பேன் என்று பேசியவர் சீமான். பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை தீவிரமாக எதிர்த்து, அதை தடுத்ததிலும் அவருக்குப் பெரிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட சீமானை இன்று திமுக போய் அரவணைக்கிறது என்றால் அதிகாரம் ஒன்று மட்டும்தான் அவர்களின் குறிக்கோள். அதற்காக யாருடன் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அவர்கள் கைக்கோர்ப்பார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு.

    திட்டிய சீமானுடன் எப்படி

    திமுகவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சீமானுக்கு எதிராக தங்களது வேட்பாளரை நிறுத்தாமல் அதிமுக மவுனம் காத்தால் அதிமுகவின் ஜோலி நிரந்தரமாக முடிந்தது என்று அர்த்தம்.

    Advertisement

    எனக்கு தமிழ் தேசியம் என்ற கோட்பாட்டில் எந்த உடன்பாடும் இல்லை. நான் இந்திய தேசியத்திற்கு உட்பட்டவன். சீமானின் அரசியல் என்பது எக்காலத்திலும் வெற்றி பெற முடியாத ஒரு எதிர்மறை அரசியல்.

    கடந்த தேர்தலில் நடிகர் விஜய் 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். சீமானுடைய அரசியல் வெகுஜன அரசியலுக்கு பொருத்தமில்லாதது. அவர் திமுக, அதிமுக ஆதரவில் ஜெயிக்கிறார் என்றால் அவர் பேசி வரும் தமிழ் தேசியமே பலத்த அடி வாங்கும்.

    அறிவாலயம் முடிவு என்ன

    சீமானை ஆதரித்து யாராவது வாக்கு வங்கி அரசியலுக்குச் சென்றால், சீமானுக்கு ஏற்படும் நஷ்டம் அவர்களையும் போய்ச் சேரும். இப்போதைக்கு திமுகவிடம் எந்தக் கூட்டணியும் இல்லாததால் அவர்கள் சீமானை அணுகுகிறார்கள். ஆனால், இது திமுகவின் சொந்த வாக்கு வங்கியையே கடுமையாகச் சிதைக்கும்; யார் என்ன கூறினாலும் திமுகவில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சீமானுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

    Advertisement

    தேர்தலுக்கு முன்பாக முறையாகக் கூட்டணி அமைத்துச் செல்வது வேறு, இடைத்தேர்தலில் கையாளுவது வேறு என்ற பல சிக்கல்கள் இதில் உள்ளன. ஒரு கூட்டணியை அமைப்பதாக இருந்தால், தேர்தலுக்குக் குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பிருந்தே சம்பந்தப்பட்ட கட்சியை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்..

    முதல் நாள் வரை ஒரு கட்சியைத் திட்டிவிட்டு, அடுத்த நாளே அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால்தான் அரசியலில் 4+4=8 ஆகாமல் பூஜ்ஜியமாக மாறும்,

    சீமானுக்கு ஓட்டு விழுமா

    திமுக ஆதரிப்பதால் மட்டும் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக சீமானுக்கு ஓட்டுப் போட்டுவிட மாட்டார்கள். குறிப்பாக அதிமுக வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் விஜய் ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்தினால் அந்த வாக்குகள் அனைத்தும் தவெக பக்கமே திரும்பும்.

    Advertisement

    ஒரு சராசரி அதிமுக தொண்டன் தீவிரமான திமுக எதிர்ப்பாளன். தலைவர்கள் சமரசம் செய்துகொண்டாலும் தொண்டர்கள் ஒருபோதும் திமுகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அடுத்தகட்ட தேர்வாக விஜய்யோ அல்லது அண்ணாமலையோதான் இருப்பார்களே தவிர திமுகவிற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள்.

    சமீபத்திய தேர்தல் முடிவுகளை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் ஒட்டுமொத்த பூலோகமே இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போலத்தான் தற்போது திமுகவின் நிலை உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK 4+4 = 0 Formula: Is Arivalayam Sending an SOS Urgent Signal to AIADMK Through Seeman?