சென்னை: சட்டசபைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக வெறும் 2ல் மட்டுமே வெற்றி பெற்றது. திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையை தவெக புயல் தாக்கியது என்றே சொல்லலாம். இதனால் மீண்டும் சென்னையை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிமுகவின் 3 முக்கிய நிர்வாகிகளை திமுக தங்கள் பக்கம் இழுக்க தயாராகிவிட்டது.
தமிழக அரசியல் களத்தில் எப்போதுமே திமுகவின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகக் கருதப்படுவது சென்னை மண்டலம் தான். ஆனால், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த சென்னை மாவட்டத்தையும் 'தவெக புயல்' தலைகீழாக உலுக்கிப் போட்டுள்ளது. தலைநகரின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
சென்னை எப்போதும் கலைஞர் காலத்திலிருந்தே திமுகவின் பக்கம் உறுதியாக நிற்கும் பகுதியாகும். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வரலாறு காணாத அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது. சென்னையில் தங்களின் அரசியல் செல்வாக்கு சரிந்ததைத் தொடர்ந்து, இழந்த கோட்டையை மீண்டும் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் வலுவான அடித்தளம் கொண்ட அதிமுகவின் 3 முக்கிய உயர்மட்ட நிர்வாகிகளை இழுக்க திமுக திட்டமிட்டுள்ளது. சென்னையை மீண்டும் கைப்பற்ற வேண்டுமானால், அடிமட்ட அளவில் செல்வாக்குள்ள உள்ளூர் தலைவர்கள் அவசியம் என்பதை திமுக தலைமை உணர்ந்துள்ளது. இதனால் அதிமுகவில் சிறப்பாக செயல்படக் கூடிய 3 நிர்வாகிகளுடன் அறிவாலயம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவில் உள்ள முக்கியப் புள்ளிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் சென்னை கட்டமைப்பை பலவீனப்படுத்துவதோடு, தவெக-வுக்கு எதிராகப் பலமான ஒரு தற்காப்பு அரணை உருவாக்க முடியும் என திமுக நம்புகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்துவிட்டார். இவர் திமுக பக்கம் வர முக்கிய காரணமாக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன் தான். இதன்பின் சேகர்பாபுவுக்கு எந்த சங்கடமும் வந்துவிடக் கூடாது என்று அவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது அதிமுகவின் சென்னை மாவட்டச் செயலாளர்களான ராஜேஷ், தி நகர் சத்யா, விருகை ரவி ஆகியோருடன் சேகர்பாபு பேசி வருகிறார். விசிகவில் ஷா நவாஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், அவருக்கு சில தயக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தனக்கான முக்கியத்துவம் இருக்குமா என்று அஞ்சுகிறார். ஆனால் ஷாநவாஸ் தரப்புடன் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக சொல்கின்றனர். அதேபோல் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜியுடனும் திமுக பேசுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் விசிகவில் இருந்து விலகி வர பலரும் தயங்குகின்றனர்.