திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகலாம்! தரம் தாழ்ந்துட்டாங்க! பொங்கிய சிபிஎம் சண்முகம்

  • சென்னை: வரும் காலத்தில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.

    Advertisement

    அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.

    தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை.

    இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர்.

    வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அது போல் அவர் சோசியல் டாக்கிஸ் எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுகவும் திமுகவும் இணைந்தால் என்ன தவறு என நிறையப் பேர் கேட்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில் இதுதான்.

    Advertisement

    அந்த இரு கட்சிகளும் அப்படிப்பட்ட கட்சியே அல்ல! ஒரு வீட்டில் சாவு நடந்தால் அங்கிருந்து இங்கு வரமாட்டார்கள். ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால் இங்கிருந்து அங்கு செல்ல மாட்டார்கள். எதிரே திமுககாரர் வந்தால் அதிமுககாரர் வேறு பாதையில் சென்றுவிடுவார். அப்படியிருந்தவர்கள்.

    சித்தாந்த ரீதியில் பார்த்தாலும் அதிமுகவையும் திமுகவையும் சமமாக கருத முடியாது. மண் சோறு சாப்பிடுவது, மொட்டை போடுவது என சகலத்தையும் செய்கிறது அதிமுக! எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாத போதும் ஜெயலலிதா சிறையில் இருந்த போதும் அதிமுகவினர் இதையெல்லாம் செய்தார்கள். அதாவது மூடநம்பிக்கையில் மூழ்கி போன, பக்தி என்ற பெயரில் எல்லாவிதமான மூடநம்பிக்கையிலும் வளர்ந்த ஒரு கட்சி அதிமுக!

    Advertisement

    அதிமுகவையும் திமுகவையும் திராவிட இயக்கம் என யார் சொல்வது? தேவைக்காக சொல்லிக் கொள்கிறார்கள்! திராவிட இயக்கத்தில் பழைய விழுமியங்கள், பழைய கொள்கைகள் இவற்றையெல்லாம் அவர்கள் கடைப்பிடிக்கிறார்களா?நிறைவேற்றுக்கிறார்களா என்பது ஆழ்ந்த ஆய்வுக்குட்பட்டது.

    உதாரணமாக ஜாதிய கொலைகள், ஆணவ படுகொலைகளுக்கு எதிராக நாங்கள் எல்லாம் களத்தில் நிற்கிறோம். எந்த திராவிடக் கட்சிகள் நிற்கின்றன? ஏன் நிற்க மாட்டேங்கிறார்கள்?

    திராவிட கட்சிகள் தேர்தல் அரசியலுக்குள் போய் விழுந்துவிட்டார்கள். தேர்தலில் வாக்கு வாங்க வேண்டும் என்றால் எந்த சாதியினரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஓட்டை பற்றி கவலைப்படாததால்தான் களத்தில் நிற்கிறோம். எனவே பழைய திராவிட இயக்கங்கள் அப்படியே இருக்கிறார்கள், பழைய கொள்கை, கோட்பாடுகளில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தவறு.

    Advertisement

    ஆட்சி அதிகாரம், அதற்கு உட்பட்டதுதான் மற்ற எல்லாம் என்ற சமரச போக்கிற்கு உள்ளாகிவிட்டார்கள். திமுகவும் அதிமுகவும் இணைந்தால் எங்களுக்கு ஏன் நஷ்டம்? எதிர்காலத்தில் தவெக நீடித்து நிலைத்திருக்கும் நிலை வந்தால் அதிமுகவும் திமுகவும் ஒன்றாக செயல்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பல கட்சிகள் இணைந்துள்ளன, பல கட்சிகள் பிரிந்துள்ளன. எனவே அரசியலில் எந்த சூழலும் உருவாகலாம்.

    அண்ணா எழுதிய புத்தகங்களை படித்து பாருங்கள். அந்த புத்தகத்திற்கும் தற்போது இருக்கும் திமுகவிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? தேர்தலில் வெற்றி பெற வேண்டும், அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தாழ்ந்து போய்விட்டார்கள். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK–AIADMK Alliance Remark sparked political discussion after CPM state secretary P. Shanmugam claimed it would not be surprising if both parties eventually function as a single party.