மாஜிக்கள் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட இடைத் தேர்தல்! களத்தில் கெத்தாக திமுக! தவெக - அதிமுகவில் யார்?

  • சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் கட்சியாக அதிமுக விருப்பமனு பெறப்படும் என அறிவித்த சுவடு முடிவதற்குள்ளாகவே, திமுக வேட்பாளர்களையே அறிவித்துவிட்டது. முதல் இடைத்தேர்தலில் திமுக - அதிமுக தரப்பில் சில முக்கிய தலைகள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனி தொகுதி என்பதால் பலரும் களமிறங்கவில்லை என்கின்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழக அரசு முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று 115 நாட்கள் கடந்து இருக்கிறது. சட்டசபை தேர்தல் முடிவடைந்த உடன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவளித்தன.

    Advertisement

    இதனால் நீண்ட இழுபறிக்குப் பிறகு முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்20க்கும் மேற்பட்டோர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    திருச்சி கிழக்கு

    இதனால் அவர்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். முன்னதாக திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    தமிழக இடைத்தேர்தல் 2026

    அதற்குப் பிறகு பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது.

    விருப்ப மனு

    ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படையில் தற்போது தாராபுரம் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே விருப்ப மனு பெறப்படும் என அதிமுக அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி சேர்ந்த சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.

    Advertisement

    அதிமுக

    அதிமுக தரப்பில் வேட்பாளர்களை தேடி வரும் நிலையில் அதிரடியாக இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது திமுக தலைமை. குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் சென்னை எழும்பூரில் போட்டியிட்ட பரந்தாமன் மதுராந்தகத்திலும், தாராபுரத்தில் சுகன்யாவும் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி இருக்கிறது திமுக.

    பொது வேட்பாளர்

    தமிழக வெற்றி கழகம் இன்னும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு தேடி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கும் என்பதும் உறுதியாகி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக பொது வேட்பாளர் என பேச்சு அடிபட்ட நிலையில் தற்போது அந்த பேச்சுக்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. வழக்கம் போல அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்க தயாராகி வருகின்றன. இன்னும் சில நாட்களில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களும், அதிமுக - நாம் தமிழர் வேட்பாளர்களும் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    தனி தொகுதிகள்

    ஆனால் முன்னரே சொன்னது போல இரண்டு தொகுதிகளும் தனி தொகுதிகள் என்பதால் தமிழகம் தெரிந்த முக்கிய முகங்கள் தேர்தலில் களமிறங்கவில்லை. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் களமிறங்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அந்தத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதே போல இடைத் தேர்தலை எதிர்பார்த்திருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி உள்ளிட்ட பலரும் களமிறங்க வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

    நாதக சீமான்

    மேலும் முதல் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சொல்லி இருந்த நிலையில் தற்போது அவரும் களமிறங்க வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. இதனால் இந்த தேர்தல் கிட்டத்தட்ட ஒரு தலைப்பட்சமான தேர்தலாகவே இருக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே விஜய் அலையை தாண்டியும் வெற்றி பெற்றிருந்தனர். அதனால் அங்கு இரட்டை இலைக்கு என்று தனி வாக்கு வங்கி இருக்கிறது. தற்போது ஆளுங்கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருக்கும் நிலையில் எல்லா ஃபேக்டர்களையும் தாண்டி வெற்றி பெறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    DMK names candidates for Madurantakam and Dharapuram, while TVK and AIADMK prepare for a crucial battle in Tamil Nadu bypolls.