திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு!

  • சென்னை: சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில், திமுகவின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இருவரும் திடீரென நேரில் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான சூழலில் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு பழமையான ஹோட்டலில், திமுக முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகிய இருவரும் திடீரென நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டவர் பெஞ்சமின்.

    Advertisement

    இந்த சட்டசபைத் தேர்தலில் பெஞ்சமின் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சென்னையில் உள்ள ஒரு பிரபல பழமையான ஹோட்டலுக்கு இன்று காலை சேகர்பாபு மற்றும் பெஞ்சமின் இருவரும் அடுத்தடுத்து வந்துள்ளனர். ஹோட்டலின் தனியறை ஒன்றில் அமர்ந்து, இருவரும் மிக நீண்ட நேரமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வெளியே வந்த போது இருவரும் செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

    மதுரவாயல் தொகுதியில் தீவிரமாகக் களமிறங்கிய பெஞ்சமின், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவும் உட்கட்சிச் சூழல் மற்றும் செயல்பாடுகளில் சற்று அதிருப்தியில் இருந்ததாக ஒரு பேச்சு நிலவி வந்தது. சென்னையில் ஏற்கனவே திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்த மல்லுக்கட்டி வருகின்றன.

    Advertisement

    இதனால் சென்னையில் உள்ள அதிமுகவின் முக்கிய முகங்களை இழுப்பதன் மூலம் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் தங்களின் பிடியை மேலும் வலுவாக்க திமுக திட்டமிட்டு வருவதன் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. மாற்றுக்கட்சியினரை திமுகவிற்குள் கொண்டு வரும் முக்கியப் பொறுப்புகளைச் சென்னை மண்டலத்தில் சேகர்பாபு கவனித்து வருகிறார்.

    ஏற்கனவே விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்துவிட்டார். அடுத்த சில வாரங்களுக்கு மாற்று கட்சியினரை திமுகவில் சேர்க்கும் திட்டத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் அதிமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் திமுக பக்கம் வருவார்கள் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சேகர்பாபு மற்றும் பெஞ்சமின் இடையிலான இந்த சந்திப்பு வெறும் 'நட்பு ரீதியிலானது' என்று கடந்து போக முடியாது என்கின்றனர் விபரமறிந்தவர்கள். முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரான இவர், சென்னை புறநகர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் நல்ல செல்வாக்கு கொண்டவர். இவர் திமுகவிற்கு மாறினால் அது சென்னை அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாக அமையும்.

    ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்களே அடுத்தடுத்து மாற்றுப் பாதையைத் தேடிச் செல்வது அதிமுக தலைமைக்குப் பெரும் குடைச்சலாக மாறியுள்ளது. இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையிலும், "பெஞ்சமின் விரைவில் அறிவாலயம் நோக்கிப் பயணிக்கலாம்" என்று திமுகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    DMK: Another Blow to AIADMK? Former Minister P. Benjamin’s Long Meeting with DMK’s Sekar Babu in Chennai