திமுக சார்பு அணிகளிலும் தொடங்கிய மறுசீரமைப்பு.. உதயநிதியுடன் நடக்கும் மீட்டிங்.. அடுத்தது என்ன?

  • சென்னை: திமுகவில் சார்பு அணிகளை மறுசீரமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இளைஞரணியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மறுசீரமைப்பு குழு விரைவில் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்த உள்ளதாகவும், கனிமொழி வசம் இருக்கும் மகளிரணியை இரு அணிகளாக பிரிக்கலாமா என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இடைத்தேர்தல் வந்ததால், சிறிது காலம் மறுசீரமைப்பு பணிகளுக்கு இடைவெளி கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு மற்றும் மாவட்டங்களின் எண்ணிக்கை உயர்த்தி ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

    Advertisement

    அடுத்தக் கட்டமாக மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்த திமுக தயாராகி வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் மட்டுமல்லாமல் சார்பு அணிகளிலும் மறுசீரமைப்பு தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இளைஞரணி, மாணவரணி, மகளிரணி மற்றும் ஐடி விங்கை பலப்படுத்த வேண்டும் என்று பலரும் தலைமையிடம் அறிவுறுத்தினர்.

    இளைஞரணி நீங்கலாக மற்ற அணிகளின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. அதேபோல் இளைஞரணியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை விரைவில் மறுசீரமைப்பு குழு சந்தித்து ஆலோசிக்க உள்ளது. அதேபோல் கனிமொழி வசம் இருக்கும் மகளிரணியை இரண்டாக பிரிக்கலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.

    Advertisement

    இதன் மூலமாக இளம் பெண்களை இணைக்க சில முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று மறுசீரமைப்பு குழு கருதுகிறது. மறுபக்கம் ஐடி விங் முழுமையாக மாற்றப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவரணி தலைமையை சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தான் திமுக தலைமை மாற்றியது. இதனால் மாணவரணி தலைமையில் மாற்றம் இருக்கும் என்பது சந்தேகம் தான்.

    ஏற்கனவே 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது. தற்போது ஸ்டாலின் மறுசீரமைப்பு பணிகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறார். இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்குள் திமுகவில் மறுசீரமைப்பு பணிகளை முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    DMK Begins Overhaul of Party Wings: Udhayanidhi Stalin to Review Youth Wing Reforms