திமுக - பாஜக கூட்டணி அமையுமா? அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என வானதி சீனிவாசன் பதில்

  • சென்னை: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என பாஜகவின் வானதி சீனிவாசன் பேசியுள்ளார். மேலும் திமுக பாஜக கூட்டணி அமையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அது உருவாகும் போது எல்லாரும் சொல்வாங்க.." என்று பதில் அளித்தார். மேலும் தவெக அரசு வந்த பிறகு எந்த மாற்றமும் இல்லை என்றும், தமிழகத்தில் அதே சட்டம் ஒழுங்கு தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக தொகுதி மறுவரையரை மசோதாவை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த மசோதாவை ஆதரிக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் தமிழகத்தில் ஆளும் தவெக தொடர்ந்து பேசி வருகிறது. அதே நேரத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை படித்து பார்த்துவிட்டுதான் நிலைப்பாடு எடுக்க முடியும் என்று திமுக கூறி வருகிறது.

    Advertisement

    திமுக பாஜக கூட்டணி அமையுமா?

    இதனை முன்வைத்து திமுகவும் பாஜகவும் இணக்கமாக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று தவெக அரசியல் ரீதியாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கடந்த இருதினங்களுக்கு முன்பாக திமுக முன்னாள் எம்பி கனிமொழி சோமு, அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடை​யாது. தமிழகத்​துக்கு எது நல்​லதோ, அது எங்​கிருந்து வந்​தா​லும் நாங்​கள் அதை கண்​டிப்​பாக ஆமோ​திப்​போம், வரவேற்​போம்" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாஜகவின் வானதி சீனிவாசனும் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என பேசியுள்ளார். மேலும் திமுக பாஜக கூட்டணி அமையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அது உருவாகும் போது எல்லாரும் சொல்வாங்க.. அது உருவாகும் முன்பே நீங்கள் உருவாக்கி விட்டுவிடுவீங்க போலயே.." என்று கூறினார். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    Advertisement

    நீட்டை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்

    நீட் தேர்வை பாஜக கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் வந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக இருக்கும். நீட் தேர்வில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு சரி செய்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    பெற்றோர்களும் மாணவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். தமிழ்நாடு மாதிரியான அதிக கல்வியறிவு கொண்ட மாநிலத்தில் கூட, நீட் தேர்வு வந்த பிறகுதான் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அதிகமாக மருத்துவ கல்லூரிகளில் நுழைகிறார்கள். இதனை எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். இதற்கு முன்னாடி பணம் படைத்தவர்கள் மட்டும்தான் போற மாதிரி இருந்தது. நீட் தேர்வுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. சமுதாயம் இதை ஏற்றுக்கொண்டது.

    Advertisement

    சட்டம் ஒழுங்கு மேம்படவில்லை

    அரசியலுக்காக தீர்மானம் நிறைவேற்றிக்கொள்ளலாம். நீட் தேர்வில் தகுதி பெறாதவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு இல்லை. தவெக தேர்தலுக்கு முன்பாக என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. பட்ஜெட்டிலாவது வருமா என எதிர்பார்த்தார்கள்.

    கடைசியில் பட்ஜெட்டும் எங்களிடம் ஒன்னும் இல்லை காலி என சொல்லிவிட்டார்கள். சட்டம் ஒழுங்கு மேம்படவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. மாற்றம் என்பது சேரில் உக்காந்து இருப்பவர்கள் மாறியிருக்கிறார்களே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. இதுதான் எதார்த்தம்" என்றார்.

    English Summary

    DMK BJP alliance: BJP Vanathi Srinivasan has stated that there are no permanent enemies or permanent friends in politics. Responding to a question from reporters about whether a DMK-BJP alliance might be formed, she said, "Everyone will speak about it when it takes shape."