சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக வெளியான தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக எதிர்ப்பை விட தவெக எதிர்ப்புதான் பிரதானம் என திமுக ஆதரவாளர்கள் சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றும் அந்த யூகத்துக்கு வலு சேர்த்து உள்ளது.
அதே நேரத்தில், இதையெல்லாம் வைத்து திமுக - பாஜக கூட்டணி உருவாகப் போகிறது என்று சொல்ல முடியாது. ஆனால், எதனால் இதுபோன்ற விவாதங்கள் உருவாகின்றன? அதன் பின்னணி என்ன? என்பதுதான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.
தமிழக அரசியல் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பாஜகவை கொள்கை ரீதியாக மிகக் கடுமையாக எதிர்க்கும் கட்சி என்றால் அது திமுக தான். அந்த அளவுக்கு பல ஆண்டுகளாக திமுகவும், பாஜகவும் அரசியல் எதிரிகளாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவை எதிர்ப்பதே திமுகவின் முக்கிய அரசியல் ஆயுதமாக இருந்தது. தேர்தல் களம், கொள்கை அரசியல், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என அனைத்து தளங்களிலும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தது திமுக. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதற்கு பல உதாரணங்களை உள்ளது. அதற்கு திமுகவும் விதிவிலக்கு அல்ல. 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக, அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றது. மத்திய அமைச்சரவையிலும் திமுக முக்கிய பங்கு வகித்தது. பின்னர் காலச்சக்கரத்தால் அரசியல் சூழல் மாறியதால் அந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த திமுக அதற்குப் பிறகு பாஜக பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பும், பின்பும் தமிழகத்தில் பல கட்சிகள் காலச் சூழலுக்கேற்ப கூட்டணி அமைத்த சம்பவங்கள் ஏராளம். எனவே அரசியலில் கூட்டணி என்பது கொள்கையை விட சூழ்நிலையை அதிகமாக சார்ந்திருக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. சரி இப்போது பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்ல என்ன காரணம் என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா? அதற்கான சில காரணங்களை விரிவாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தற்போது திமுக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் பாஜக அல்ல; தவெக தான் என்று பலரும் கருதுகின்றனர். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக அணிக்கு சென்றுள்ளன. அதேபோல் அதிமுகவில் இருந்த முக்கிய தலைவர்களும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் போட்டி திமுக - அதிமுக என்ற நிலையிலிருந்து, திமுக - தவெக என்ற சூழலை நோக்கி நகர்ந்து மாறி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் சமூக வலைதளங்களில் சில திமுக ஆதரவாளர்கள்," பாஜக திமுகவுக்கு கொள்கை ரீதியான எதிரியாக மட்டுமே இருக்கிறது. அரசியல் ரீதியாக தமிழக வெற்றி கழகம் தான் திமுகவுக்கு எதிரி. எனவே அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்ப்பதை விட தமிழக வெற்றி கழகத்தை தான் எதிர்க்க வேண்டும்" என கூறி வருகின்றனர். இதனால் வரும் காலத்தில் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டாலும் அதில் தவறில்லை என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திமுகவினர் நேரடியாக இதுபோன்ற கருத்துக்களை சொல்லாவிட்டாலும் கடந்த பல ஆண்டுகளாக திமுக ஆதரவாளர்களாக தங்களை காட்டிக் கொண்டவர்கள், தற்போது செயல்பட்டு வருபவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான தயாநிதி மாறன் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் இந்த விவாதத்தை மேலும் சூடு பிடிக்க வைத்திருக்கிறது. " இதே நாளில் தான் திமுக தலைவர் கலைஞரும், வாஜ்பாயும் இணைந்து டைடல் பார்க்கை திறந்து வைத்தனர்" என ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார் தயாநிதி மாறன். மரியாதை நிமித்தமாக தயாநிதி மாறன் இந்த வீடியோவை பதிவிட்டதற்கே பல்வேறு தரப்பினரும் ஆதரவு குரல்களையும் எதிர்ப்பு குறள்களையும் கூறி வருகின்றன. ஆனால் தயாநிதி மாறன் கருத்துக்கு பெரும்பாலும் ஆதரவான பதிவுகளை பார்க்க முடிகிறது .இதனால் மெல்ல மெல்ல திமுக ஆதரவாளர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்து வருகிறார்களா என்ற கேள்வி எழுவதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் பாஜகவும் தமிழகத்தில் தான் வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்துக்கு தாங்கள் வரவேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். அதிமுகவை ஓரம் கட்டி விட்டு அந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் எண்ணம். இப்படி ஒரே கட்சியை நோக்கி இரு கட்சிகள் நகர்ந்து வரும் நிலையில் பாஜக திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் எடுக்கும் என்கின்றனர். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை.. எதிரிகளும் இல்லை.. ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாகவும், எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாகவும் மாறிய வரலாறு இந்திய அரசியலின் பல்வேறு பக்கங்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் திமுகவின் முழு கவனமும் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி திரும்பி இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களை மட்டுமே திமுக பாஜக கூட்டணி தொடர்பான விவாதங்கள் சூடு பிடித்திருக்கிறது. வரும் நாட்களில் இதற்கான முழு விடையும் கிடைக்கும் என்கின்றனர்.பாஜக எதிர்ப்பு
திமுக
பாஜகவுடன் திமுக
திமுக கூட்டணி
தமிழக வெற்றி கழகம்
திமுக ஆதரவாளர்கள்
தயாநிதி மாறன்
திமுக ஆதரவு
என்ன நடக்கும் ?