லண்டனில் இருந்து இன்று காலை வந்த ஃப்ளைட்டில் சென்னை வராத ஸ்டாலின்.. காத்திருந்த திமுகவினர் ஏமாற்றம்

  • சென்னை: லண்டன் சென்றிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட விமானத்தில் அவர் வராததால் அவரை வரவேற்க திரண்டிருந்த திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Advertisement

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேரனும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப் படிப்பை முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி பட்டம் பெற்றார்.

    Advertisement

    பட்டம் பெறும் பேரனை நேரில் வாழ்த்துவதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டுச் சென்றார். மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். பின்னர், உதயநிதியும் தனது மனைவி கிருத்திகாவுடன் லண்டன் சென்றார். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ஸ்டாலின், பேரனைக் கட்டியணைத்து வாழ்த்தினார்.

    அதைத்தொடர்ந்து சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின், தனது பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வருவதாக இருந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் தயாராக இருந்தனர்.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் ஏராளமான திமுகவினர் ஸ்டாலினை வரவேற்க காத்திருந்தனர். திமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான கே.என்.நேரு, பொன்முடி, சக்கரபாணி, காந்தி, மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு வருகை தந்தனர்.

    மு.க.ஸ்டாலினின் காரும் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. தாரை தப்பட்டையுடன் வரவேற்கத் தயாராக இருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி லண்டன் விமானத்தில் மு.க.ஸ்டாலின் வந்து சேரவில்லை. எனினும், திமுக தலைவர்களும் தொண்டர்களும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

    இதையடுத்து, ஸ்டாலின் விமானத்தை தவறவிட்டுவிட்டதாக தகவல் வெளியானது. திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அங்கு கூடியிருந்த திமுகவினரிடம், திமுக தலைவர் ஸ்டாலின் விமானத்தை தவற விட்டுவிட்டதாகவும் இன்று இரவு தான் வருவார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, திமுகவினர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    English Summary

    Senior DMK leaders and cadres who had gathered to welcome DMK President MK Stalin upon his return from London were disappointed when he did not arrive on the flight scheduled for today.