விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு

  • சென்னை: ''விஜய் தேர்தல் பிரசாரத்துக்கு 18 வயதுக்கு குறைவானவர்களை பிரசாரத்திற்காக பயன்படுத்தி உள்ளார். வருமான வரி பாக்கியில்லை என்று வேட்புமனுவில் கூறியுள்ள விஜய், வருமான வரி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை மறைத்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் 2ம் இடம் பிடித்த என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும்'' என்று விஜய்யிடம் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று செயல்படுகிறார்.

    Advertisement

    முன்னதாக இந்த சட்டசபை தேர்தலில் விஜய் மொத்தம் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஒன்று சென்னை பெரம்பூர். மற்றொன்று திருச்சி கிழக்கு. இதில் 2 சட்டசபை தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பெரம்பூர் எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார்.

    இந்நிலையில் தான் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இன்னும் 5 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையை தொடங்கி உள்ளன.

    Advertisement

    திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து அவரிடம் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

    ''விஜய் தனது தேர்தல் பிரசாரத்துக்கு 18 வயதுக்கு குறைவானவர்களை பிரசாரத்திற்காக பயன்படுத்தி உள்ளார். வருமான வரி பாக்கியில்லை என்று வேட்புமனுவில் கூறியுள்ள விஜய், வருமான வரி தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை மறைத்துள்ளார். கட்சி துண்டு அணிந்து தேவாலயம் சென்று வழிபாடு நடத்தி உள்ளார். வெளிநாட்டில் உள்ளவர்களை வைத்து வலைதள பிரசாரங்களை முன்னெடுத்தார். தேர்தல் செலவு தொடர்பான கணக்குகளை அவர் இன்னும் தாக்கல் செய்யவில்லை. 'ரூட்' சமூக வலைதள பிற செலவு விவரத்தை அறிவிக்கவில்லை.

    Advertisement

    தற்போது விஜய் திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் 2ம் இடம் பிடித்த என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும்'' என மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    திருச்சி கிழக்கு தொகுதியை எடுத்து கொண்டால் விஜய் மொத்தம் 91,381 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து சிட்டிங் எம்எல்ஏவாக போட்டியிட்ட திமுகவின் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் மட்டுமே பெற்று 27,416 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 19,715 ஓட்டுகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Trichy East DMK Candidate Inigo Irudayaraj has filed a sensational petition in the Chennai High Court stating, "Vijay utilized individuals under the age of 18 for his election campaign. Although he declared in his nomination papers that there were no outstanding income tax dues, he concealed a pending case related to income tax. Vijay has resigned now. So should be declared me as the winner. Furthermore, an order should be issued restraining the announcement of a by-election for the Trichy East constituency until the conclusion of this case."