மக்களை நம்பி தலைவர் மு.க.ஸ்டாலின்.. தாராபுரத்தில் திமுக தான் வெற்றி! வேட்பாளர் சுகன்யா நம்பிக்கை!

  • கோவை: தவெக ஆட்சியில் சட்டமன்றம் நடக்கிறதா? என்பதே தெரியவில்லை எனவும், சகிக்க முடியாத காட்சியாக உள்ளது என தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா விமர்சித்துள்ளார். மேலும், தாராபுரம் தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக தளவாய்ப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகன்யாவை அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Advertisement

    கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் சுகன்யா, தாராபுரம் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து தனது சொந்த ஊரான தளவாய்ப்பட்டினத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசுவதற்கு பதிலாக முதலில் சென்னைக்குச் சென்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். அதன் பின்னர் தாராபுரம் தொகுதிக்கு வந்து செய்தியாளர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து எனது தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசுவேன்.

    Advertisement

    தமிழ்நாட்டு மக்களை நம்பி தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதேபோல், தலைவர் ஸ்டாலினை முழுமையாக நம்பி தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்கியுள்ளேன். மக்களை நம்பி தேர்தலைச் சந்தித்து வெற்றியைப் பெற்று, அந்த வெற்றிக்கனியை தலைவரின் காலடியில் சமர்ப்பிப்பேன். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

    சட்டப்பேரவைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுகன்யாதான் என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. மக்களின் ஆதரவுடன் இந்த வெற்றியை உறுதி செய்வேன். தமிழகத்தில் தற்போது தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆட்சியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்தது. நடப்பதும், நடந்து கொண்டிருப்பதும் சட்டப்பேரவையா? ஆட்சியா நடக்கிறதா? என்பது தெரியவில்லை. சகிக்க முடியாத காட்சியாகத் தான் உள்ளது" என்றார். இன்றிரவு சென்னை செல்லும் அவர் திமுக தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்த பின்னர் தாராபுரம் திரும்பி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    DMK candidate Suganya expressed confidence in winning Dharapuram bypoll, praising Stalin’s leadership and criticizing the TVK government.