சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. பெரியார் சிலையின் முகத்தில் பிளாஸ்டிக் கவரை மூடி இறுக்கமாக கட்டியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் பெரியார் சிலையின் முகத்தில் இருந்து பிளாஸ்டிக் கவரை அகற்றினர். பெரியார் சிலையின் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டு இருக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த கீழ்த்தரமான செயலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை பெரியார் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், அவரது சிலை, கொள்கை எதிரிகளையும் - கொள்கையற்ற கூட்டத்தையும் இன்றும் அச்சுறுத்துகிறது. பிற்போக்கு சக்திகள் செய்யும் இது போன்ற செயலால், பெரியாருக்கு எந்த களங்கமும் ஏற்படப் போவதில்லை. மாறாக, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு தறிகெட்டு இருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு!" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "சேலத்தில் தந்தை பெரியார் சிலையில், முகத்தைப் பிளாஸ்டிக் தாளால் மூடி அவமதிக்க முயன்றுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். ''காவிகள், காலிகளின்'' இந்தச் செயலுக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த நிலை தொடரக் கூடாது. தந்தை பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பிடிபட்டால், அவர்களை ''மனநிலை குன்றியவர்கள்'' என்று அடையாளப்படுத்துவதைக் காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. தந்தை பெரியாரை அவதூறு செய்வோரின் மனநிலை அத்தகையது தான் என்றாலும், அதைச் சாக்காகச் சொல்லி சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர்களைத் தப்பவிடக் கூடாது. தமிழ்நாட்டின் அமைதிக்கும், சட்டஒழுங்குக்கும் கேடாக இது அமைந்துவிடும். கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை நடந்தது - திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சியில் மீண்டும் தொடங்கிப் பார்க்கிறார்கள். தொடக்கத்திலேயே கெல்லி எறியவேண்டியது அரசின், முதலமைச்சரின் கடமையாகும்" இவ்வாறு கூறியுள்ளார்.