சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இது வெறும் 2 தொகுதிகளுக்கான தேர்தலாக இல்லாமல், தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான ஒரு முக்கியமான சோதனையாக மாறியிருக்கிறது. தவெகவை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று திமுகவும் அதிமுகவும் கணக்கு போடும் நிலையில், இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி தனது அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் விஜய்யும் உறுதியாக இருக்கிறதாம்.. இதை பற்றின பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு தவெக வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேர்தல் களத்தை சந்திக்க பல்வேறு வியூகங்களை இக்கட்சிகள் வகுக்கத் தொடங்கி யிருக்கிறது.
இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்தினால் தான், விஜய்யை எதிர்த்தும், சோசியல் மீடியாக்களில் ரூட் மாஃபியா நடத்தும் ரீல்ஸ் யுத்தத்தை எதிர்த்தும் வருங்காலத்தில் அரசியல் செய்ய முடியும் என்று திமுக, அதிமுக தலைமைகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சீரியஸ் டிஸ்கஷன் இந்த இரு கட்சிகளின் தலைமையிலும் நடந்துகொண்டிருக்கின்றன. அதேபோல, "இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் தான், எம்ஜிஆர் இமேஜ் உங்களுக்கு கிடைக்கும். இடைத்தேர்தலின் வெற்றிதான், திமுக-அதிமுக இரு கட்சிகளையும் ஒரு சேர பலவீனப்படுத்த முடியும்" என்று தவெக ஆலோசகர்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதற்கு விஜய், "நானும் அதையேத்தான் சொல்கிறேன்.. இடைத்தேர்தலின் வெற்றி நமக்கு முக்கியமானது. என்னுடைய எதிர்பார்ப்பு, திமுக-அதிமுக இரண்டையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யலாம். அதற்கான வழிகளை ஆராயுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்" என்கிறார்கள் ஆலோசகர்களுக்கு நெருக்கமானவர்கள். இதற்கிடையே, வேட்பாளர் தேர்வில் சில கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. அதாவது, "இரண்டு தொகுதிகளுமே அதிமுக ஜெயித்தவை. அவர்களின் எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் தான் இடைதேர்தல் வருகிறது. மீண்டும் அவர்களுக்கே சீட் வழங்கினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என எடுக்கப்பட்ட தகவல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதனால், ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நிறுத்தலாமா?" என விஜய்யைச் சுற்றியிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே அதனை இடைமறித்த விஜய், "தவெகவில் இணைந்த அவர்களை தவிர்ப்பது நல்லாயிருக்காது. அவர்களுக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதாக திமுக நினைப்பதால் திமுக போட்டியிடுகிறது. இடைதேர்தலில் போட்டியிட ஸ்டாலின் சாருக்கு விருப்பமில்லை என நமக்குத் தெரியும் தானே.. உதயநிதியின் பிடிவாதத்தில் தான் வேட்பாளர்களை திமுக நிறுத்தியுள்ளது. எதனை பெரிதாக நம்பி திமுக நிற்கிறதோ அதை உடைத்து , நமது வேட்பாளர்களான இவர்களை ஜெயிக்க வைப்பதுதான் நமக்கு விடப்பட்டிருக்கும் சவால். அதனால் இவர்களையே வேட்பாளராக அறிவித்து விடலாம்" என விஜய் சொல்ல, அதனை ஆலோசகர்களும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.. இதனையடுத்தே மரகதம் குமரவேல், சத்யபாமா இருவரும் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்" என்று வேட்பாளர் தேர்வில் நடந்த சுவார்ஸ்யங்களை நம்மிடம் சுட்டிக்காட்டுகிறார்கள் விபரமறிந்த தவெகவினர். ஆக, இந்த இடைத்தேர்தல் 2 தொகுதிகளின் உள்ளூர் அரசியலையும் தாண்டி, விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான டெஸ்ட்டிங் களமாகவே மாறியுள்ளது. திமுகவும் அதிமுகவும் தவெகவின் வேகத்தை கட்டுப்படுத்த, இந்தத் தேர்தலை பயன்படுத்த நினைத்தால், விஜய் இதையே தனது கட்சியின் அரசியல் வலிமையை நிரூபிக்கும் முதல் பெரிய சான்ஸாக பார்க்கிறார் போலும். அதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பதிவாகும் வாக்குகள் இரண்டு வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிக்க போவதில்லை. தமிழக அரசியலில் தவெகவை எந்த இடத்தில் நிறுத்துவது என்பதற்கான ஒரு முக்கியமான அரசியல் சிக்னலாகவும் இந்த முடிவுகள் அமையலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!மதுராந்தகம் மற்றும் தாராபுரம்
டெபாசிட்டே வாங்க கூடாது
விஜய் போட்ட டபுள் கால்குலேஷன்
திமுக, அதிமுகவுக்கு செக்?